நிர்வாகத் தோல்வியே தீவிரவாதத்துக்கு காரணம்: ரகுவர் தாஸ்

நக்ஸல் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு நிர்வாகத் தோல்வியே முக்கியக் காரணம் என்று தெரிவித்த ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வர் ரகுவர் தாஸ், தனது அரசு நல்லாட்சி தருவதுடன் வளர்ச்சி சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் உறுதி கூறினார்.

ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக செய்தியாளர்களை அவர் ஜாம்ஷெட்பூரில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது ரகுவர் தாஸ் கூறியதாவது:

நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, கிராமப்புற ஏழை மக்களுக்கு இன்னமும் சாலைகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அடிப்படை வசதிகள் இல்லாததால் மருத்துவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இல்லாமல் கிராமப்புற ஏழைகள் மேலும் அவதிப்படுகிறார்கள்.

இவைதாம் நக்ஸல் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு முக்கியக் காரணங்கள். இதுபோன்ற வசதிகளைச் செய்து கொடுக்கத் தவறிய நிர்வாகத் தோல்வியால்தான், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதம் உருவாகியிருப்பதாகக் கருதுகிறேன்.

நக்ஸல்கள் யார்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம்தான். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் வேலைவாய்ப்பும், அடிப்படை வசதிகளும் தேவை. தவறான வழிகாட்டுதலால் தூண்டப்பட்ட இளைஞர்களே, தங்களது வாழ்க்கைப் போராட்டத்துக்காக ஆயுதங்களைத் தூக்குகிறார்கள்.

நக்ஸல் தீவிரவாதம் வளர்ந்திருப்பதற்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு. வேலையின்மையும், அடிப்படை வசதிகள் இல்லாததுமே நக்ஸல் தீவிரவாதத்துக்கு மூல காரணம் என்பதால், அப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண எனது அரசு முன்னுரிமை அளிக்கும்.

மாநிலத்தில் உள்ள அபரிமிதமான இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி, விரைவான வளர்ச்சி ஏற்படுத்துவதுடன், மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய பொறுப்புணர்வுடன் எனது அரசு செயல்படும்.

ஒரு மாத காலத்துக்குள் புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கான செயல்பாடு தொடங்கும். இரு மாத காலத்துக்குள் 17,000 புதிய போலீஸார் நியமிக்கப்படுவர். தற்போதுள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்தும், காலியாகவுள்ள பணியிடங்கள் குறித்தும் தகவல்கள் அளிக்குமாறு அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், வளர்ச்சி சாத்தியம் இல்லை என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாநிலத்தில் பழங்குடியின மக்களின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களது மேம்பாட்டுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ரகுவர் தாஸ்.

-http://www.dinamani.com

TAGS: