வெளி மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்களை இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என “பெஸ்பருவா குழு’ அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்த பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய பெஸ்பருவா குழுவை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் நியமித்தது. அக்குழுவின் அறிக்கை அண்மையில் மத்திய உள்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டது.
வடகிழக்கு மாநிலத்தவர்களை அவர்கள் சார்ந்த இனம், உடல் அமைப்பு, கலாசாரம் உள்ளிட்ட அடையாளங்கள் மூலம் அழைப்பவர்கள் அல்லது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிடுவோர் மீது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும், இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பெஸ்பருவா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும், வடகிழக்கு மாநிலத்தவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், இந்திய தண்டனைச் சட்டத்தில் புதிய பிரிவுகளைப் புகுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைச் சட்ட அமைச்சகம் ஆமோதித்துள்ளதால் விரைவில் இதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
தில்லியில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளிக்க அவர்களுக்கு சட்ட உதவி அளிக்க ஐந்து பெண் வழக்குரைஞர்கள் உள்பட ஏழு வழக்குரைஞர்கள் அடங்கிய குழு தில்லி சட்ட உதவிகள் ஆணையத்தில் நியமிக்கப்படுவர். வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு ஏதேனும் இழப்பு நேர்ந்தால் அவர்களுக்கான நிவாரணத்தை தில்லி அரசு வழங்கும். தில்லியில் உள்ள வடகிழக்கு மாநில அரசு விருந்தினர் இல்லம் மூலம் சம்பந்தப்பட்ட அரசுகளும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
-http://www.dinamani.com
அப்படியானால் தென் மாநிலத்தை சேர்ந்தவரை நீங்கள் மட்டும் கேவலபடுத்தலமா?