பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: 2 வீரர்கள் உள்பட மூவர் பலி

  • எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்.
    எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு முதல் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, சம்பா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அனில் மஹோத்ரா கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவு முதலாகவே சம்பா, ஹிராநகர் பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு நமது எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். நள்ளிரவு சுமார் 3 மணிவரை இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

பின்னர் சனிக்கிழமை காலை 7 மணியளவில் மீண்டும் பாகிஸ்தான் படையினர் தாக்குதலைத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதலில் மாங்கோ சாக் கிராமத்தைச் சேர்ந்த டோரி தேவி என்ற பெண் உயிரிழந்தார். மதுபாலா, ரஜினி, மன்சூ, சுரேஷ் சிங் உள்பட 11 பேர் காயமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

“ஊடுருவல் முயற்சி முறியடிப்பு’: கந்துவா மாவட்ட காவல் துறை துணை ஆணையர் ஷாகித் இக்பால் கூறியதாவது:

சம்பா மாவட்டத்துக்குள்பட்ட சோர் கலி பகுதி வழியாக, இந்திய எல்லைக்குள் நுழைய ஆயுதங்களுடன் எட்டு பயங்கரவாதிகள் தயாராக பதுங்கியிருந்தனர்.

அவர்கள் ஊடுருவுவதற்கு ஏதுவாக, நமது எல்லைப் பாதுகாப்புப் படையினரை திசைதிருப்புவதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்தியப் படையினர் நடத்திய பதில் தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் மட்டும், 550-க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறியுள்ளனர்.

குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்று இக்பால் கூறினார்.

தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

அதையடுத்து, இந்தியப் படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பகுதிகளான கந்துவா, சம்பா ஆகிய மாவட்டங்களுக்குள்பட்ட கிராமங்கள் மற்றும் 13 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு துப்பாகிகளாலும், சிறிய ரக பீரங்கிகளாலும் தாக்குதல் நடத்தினர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த 13-வயது சிறுமி ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு எச்சரிக்கை

இந்திய ராணுவம் கடந்த இரு நாள்களில் நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்காக கடந்த ஆறு மாதங்களாக பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்திய ராணுவத்தினரோ பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஒருவேளை அவர்களுக்கு பாகிஸ்தானின் இந்த மொழி புரியவில்லை என நினைக்கிறேன். எனவே, இனி இந்தியர்களுக்குப் புரிகிற மொழியிலேயே பாகிஸ்தானின் பதிலடி இருக்கும் (எல்லையில் தாக்குதல் நடத்தப்படும் என்பதையே அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்) என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நட்பை ஏற்க மறுக்கிறது பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் நட்புக் கரத்தை ஏற்க மறுத்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

அண்டை நாடுகள் அனைத்துடனும் நட்புறவை வைத்துக் கொள்ளவே நாம் விரும்புகிறோம். இதற்கு மதிப்பளித்து, போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் இந்தியப் பகுதிகள் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தும்போதும், பாகிஸ்தான் இழப்பைச் சந்தித்து வருகிறது. இருந்தபோதிலும், தொடர்ந்து அந்நாடு அத்துமீறி வருகிறது. பாகிஸ்தானுக்கு நாம் நட்புக்கரம் நீட்டுகிறோம். ஆனால் அந்நாடோ தொடர்ந்து அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு அழைப்பு விடுத்து, நட்பு நடவடிக்கையை நாம் தொடங்கினோம். அப்போது நவாஸ் ஷெரீஃப்புடன் மோடி வெறும் சம்பிரதாயத்துக்காக கரம் குலுக்கவில்லை. இருநாடுகளின் இதயங்களையும் இணைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் கரம் குலுக்கினார். ஆனால் அதை ஏற்க மறுத்து, பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைப் போன்று, மீண்டும் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நமது நாடு பலப்படுத்தியுள்ளது.

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ளவிருக்கிறார். இதையொட்டி வழக்கமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: