ஆராய்ச்சிப் பணிகளுக்கான முட்டுக்கட்டைகள் நீக்கப்படும்: மோடி உறுதி

  • மும்பை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி. உடன், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.

    மும்பை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி. உடன், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.

அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இருக்கும் முட்டுக்கட்டைகள் நீக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உறுதி அளித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில், அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:

இந்தியாவில் வர்த்தகத்தை எளிமைப்படுத்துவது குறித்து நான் பேசும்போதெல்லாம், ஆராய்ச்சி பணியை எளிமைப்படுத்துவது, ஆராய்ச்சித் துறையில் மேம்பாடு ஆகியவற்றுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுப்பதை வலியுறுத்துகிறேன். அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகிய மூன்றுக்கும், தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆராய்ச்சிப் பணிகளுக்கு இருக்கும் நிர்வாக ரீதியிலான முட்டுக்கட்டைகள், நிதி ஒதுக்குவதில் நிலவும் சிக்கல் ஆகியவை தொடர்பாக விஞ்ஞானிகள் புகார் தெரிவிக்கின்றனர். விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் புதிர்களை ஆராய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அரசு விரும்புகிறது. அரசு நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் ஆராய்வதை அரசு விரும்பவில்லை. தங்களின் திட்டங்களில்தான் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசின் ஒப்புதலில் கவனம் செலுத்தக் கூடாது. ஏனெனில், நிதி ஒதுக்குவது தொடர்பான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அதிக காலம் பிடிக்காது.

நாட்டு மக்களிடையே, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிறாரிடையே அத்தகைய நிலையை ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப நடவடிக்கையில் முதலீடு செய்வது பெரு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளும் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பொறுப்புகளில் ஒன்றாக வேண்டும். இந்த முதலீட்டை நேரடியாகவோ அல்லது சுயேச்சையான அமைப்பு மூலமாகவோ செய்யலாம்.

ஒரு நாட்டின் வளர்ச்சியும், அந்நாட்டு மக்களின் வளர்ச்சியும் அறிவியல், தொழில்நுட்பத்தோடு சம்பந்தப்பட்டதாகும். அறிவியல் ரீதியிலான தனது நடவடிக்கையால்தான், உலகின் 2ஆவது பெரும் பொருளாதார சக்தியாக சீனா தற்போது உருவெடுத்துள்ளது.

ஆராய்ச்சி, வளர்ச்சி நடவடிக்கையில் பல்கலைக்கழகங்கள் மிகவும் முன்னேறிய அமைப்புகளாகத் திகழ வேண்டும். இந்தத் துறையில் தற்போது மேற்கொள்ளப்படும் முதலீட்டின் அளவானது கவலையளிக்கிறது. ஆகையால், இதில் அதிக அளவு முதலீடு செய்ய மத்திய அரசின் அமைப்புகள் முன்வர வேண்டும்.

தேவைக்கு அதிகமான விதிமுறைகள், கடினமான நடைமுறைகளில் இருந்து பல்கலைக்கழகங்கள் விடுவிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு கல்வியியல் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். கற்பிக்கும் பணியை செய்வது போல், ஆராய்ச்சிப் பணிக்கும் பல்கலைக்கழகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

விஞ்ஞானிகளுக்கு கோரிக்கை: மங்கள்யான் விண்கலத்தை தனது முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செலுத்தி, இந்தியாவை “ஹுட்ஹுட்’ புயல் தாக்கியபோது வானிலை நிலவரம் குறித்து துல்லியமாக தகவல் தந்து ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பாதுகாக்க காரணமாக விஞ்ஞானிகள் திகழ்ந்தனர்.

நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு பேசியபோது, நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல், தொழில்நுட்பம் இதயம்போன்றது என்றார். அதற்கு ஏற்ற வகையில், நமது நாட்டு விஞ்ஞானிகளும் புதிய வகையிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். நவீன ஆதாரங்களுடன் சிறந்த அமைப்புகளை ஏற்படுத்தி தந்தனர். அந்த அமைப்புகள் தற்போதும் நமக்கு சேவையாற்றி வருகின்றன.

தங்களது அனுபவங்கள், ஆராய்ச்சி அறிவு குறித்து பல்கலைக்கழகங்களுக்கு வந்து மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் கற்றுத்தந்து அவர்களை வழிநடத்த வேண்டும். நமது நாட்டுக்கான கதவுகளை உலக நாடுகள் அடைக்கும் நேரத்தில் எல்லாம், நமது விஞ்னானிகள்தான் திறம்பட பணியாற்றி நமது நாட்டுக்கு முன்னேற்றப் பாதையை வகுத்துக் கொடுத்தனர்.

தேசத்தின் வளர்ச்சிக்கு தடைக்கற்களாகத் திகழ்ந்த வறுமையை விரட்டவும், பட்டினி, நோய்களின் ஆதிக்கத்தை குறைப்பதிலும் விஞ்ஞானிகள் முக்கியப் பங்கு வகித்தனர்.

அவற்றை அறிவியல், தொழில்நுட்பத்தால் முழுமையாக நீக்க முடியும் என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: