மும்பை : இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக, பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன், பயங்கரவாதிகள் வந்த இரண்டாவது படகு மாயமாகியுள்ளது. இந்த படகை தேடும் பணியில், கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 31ம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகில் உள்ள, கீத் பந்தர் என்ற இடத்தில் இருந்து, இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய, பயங்கரவாதிகளின் மீன்பிடி படகை, கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர். அதில் இருந்த பயங்கரவாதிகள், படகை தகர்த்தனர். படகில் இருந்த நான்கு பயங்கரவாதிகளும் இறந்து விட்டதாக, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்காக, இந்த பயங்கரவாதிகள் வந்ததாகக் கூறப்பட்டது.
ஊடுருவினர்:இந்நிலையில், பயங்கரவாதிகள் இரண்டு படகுகளில் வந்ததாக, தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறியதாவது: சம்பவத்தன்று, பயங்கரவாதிகள் இரண்டு படகுகளில் இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவினர். முதல் படகுக்கு சற்று பின், இரண்டாவது படகு வந்தது. இரண்டு படகுகளுமே, கீத் பந்தர் பகுதியிலிருந்து தான் புறப்பட்டன. இதுகுறித்து உளவுத் துறை தெரிவித்த தகவலின் அடிப்படையில், முதல் படகை, இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.
விரட்டி சென்றனர்:இதைப் பார்த்ததும், இரண்டாவது படகு வேகமாக அந்த பகுதியிலிருந்து வெளியேறி, குஜராத்திலிருந்து சென்ற மற்ற மீன்பிடி படகுகளுடன் சேர்ந்து மறைய முயற்சித்தது. கடலோர காவல் படையினர், அந்த படகை விரட்டிச்சென்றனர்.அப்போது, முதல் படகில் இருந்த பயங்கரவாதிகள், தங்கள் படகை குண்டு வைத்து தகர்த்தனர். இதனால், கடலோர காவல் படையினரின் கவனம், அந்த படகை நோக்கி திரும்பியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இரண்டாவது படகு, அங்கிருந்து மறைந்து விட்டது.இந்த படகிலும், பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் பயங்கரவாதிகள் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த படகு, மீண்டும் இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவாமல் இருக்க, கடற்படையினரும், கடலோர காவல் படையினரும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த படகு, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சென்றதா அல்லது இந்திய மீன்பிடி படகுகளுடன் இணைந்து, இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதா என்பதை கண்டுபிடிப்பதில், குழப்பம் நீடிக்கிறது.
தந்திரம்:குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வரவுள்ளார். அதற்குள், இந்தியாவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், லஷ்கர் – இ – தொய்பா,இந்தியன் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காகவே, ஏற்கனவே மும்பையில் தாக்குதல் நடத்துவதற்காக, படகின் மூலம் வந்த தந்திரத்தை, பயங்கரவாதிகள் கையாளுகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் மறுப்பு:
பாகிஸ்தான்வெளியுறவு செய்தி தொடர்பாளர் தஸ்னிம் இஸ்லாம் கூறியதாவது: இந்தியா தெரிவித்துள்ளது போல், பாகிஸ்தானிலிருந்து எந்த மீன்பிடி படகும், இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவவில்லை. சர்வதேச அரங்கில், பாகிஸ்தானுக்கு உள்ள நற்பெயரைக் கெடுப்பதற்காக இந்திய அரசு, இதுபோன்ற தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
-http://www.dinamalar.com