மீத்தேன் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க கூடாது: உதயகுமார் பேட்டி

koodankulam_udayakumarதிருவிடைமருதூர், ஜன. 5–

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கை விடக் கோரி கும்பகோணம் செட்டி மண்டபத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 பேரும் அடங்குவர். இன்று 5–வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது.

இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த அரசு கலைக் கல்லூரி 3–ம் ஆண்டு மாணவர் ஜீவபாரதி மயக்கம் அடைந்தார். அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுடன் கும்பகோணம் சப்–கலெக்டர் மந்திரி கோவிந்தராவ், டி.எஸ்.பி. கணேச மூர்த்தி, தாசில்தார் பிரபாகரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

உங்களது கோரிக்கை அரசுக்கு தெரிய படுத்தப்பட்டுள்ளது. எனவே உண்ணாவிரதத்தை கை விடுங்கள் என கூறினர். அதற்கு மாணவர்கள் இன்று அறிவிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை அணுசக்திக்கு எதிரான மக்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நியாயமான முறையில் போராடும் மாணவர்களை தமிழக அரசு கைது செய்யாமல் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மீத்தேன் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வுரிமை பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க கூடாது.

அண்டை மாநிலங்களில் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்றாமல் தமிழகத்தில் மட்டும் நிறைவேற்ற மத்திய அரசு நினைப்பது கண்டிக்கதக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரியும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-http://www.maalaimalar.com

TAGS: