குஜராத் மாநிலம், போர்பந்தர் அருகே இந்தியக் கடல் பகுதியில் வெடித்துச் சிதறிய பாகிஸ்தான் படகில் வந்தவர்கள், பயங்கரவாதிகள்தான் என ஆதாரங்கள் தெரிவிப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
இந்தப் படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்கள் என சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக பாதுகாப்புப் படையினரின் கருத்துகள் குறித்து முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸýம் சந்தேகங்கள் எழுப்பியிருந்தது. இதையடுத்து, படகில் வந்தவர்கள் குறித்து பாரிக்கர் இவ்வாறு தெரிவித்தார்.
தில்லியில் ராணுவ நிலங்கள் நிர்வாக தேசிய அமைப்புக்கான கட்டடத்துக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிய பாரிக்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் படகு குறித்து பல்வேறு ஊகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த ஊகங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால், படகு வந்த பகுதியானது மீனவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பகுதி அல்ல என்பதை மட்டும் உறுதியாகத் தெரிவிக்க முடியும். அதேபோல், அந்தப் படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்கள் எனத் தெரிவிக்கப்படுவதையும் நிராகரிக்கிறேன். ஏனெனில், அந்தப் படகு வந்த பாதையானது, கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் கடல் பகுதியும் கிடையாது.
கடத்தல்காரர்கள், அதிக அளவில் படகுகள் செல்லும் கடல் பகுதியைத்தான் பயன்படுத்துவார்கள். அப்படிச் செய்தால்தான், பிற படகுகளுடன் தங்களது படகைக் கலந்து எளிதில் தப்பிக்க முடியும் என்பது அவர்களின் கருத்தாகும்.
ஆனால், வெடித்துச் சிதறிய படகானது யாரும் பயன்படுத்தாத கடல் பகுதியில் இருந்தது. அந்தப் படகு, கடலோரக் காவல் படை விமானத்தால் சுமார் 12 மணி நேரம் கண்காணிக்கப்பட்டது. அப்போது கடத்தல் அல்லது வேறு செயலில் அவர்கள் ஈடுபட்டதுபோல் தெரியவில்லை.
கடத்தல்காரர்கள், பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினருடனோ, ராணுவத்துடனோ அல்லது சர்வதேசத் தொடர்புகளுடனோ தொடர்பில் இருக்க மாட்டார்கள். ஆனால், அந்தப் படகில் இருந்தவர்களோ பாகிஸ்தானின் கடற்படை, ராணுவ அதிகாரிகளுடனும், தாய்லாந்தில் உள்ள சிலருடனும் பேசிக் கொண்டிருந்தனர். செயற்கைக்கோள் மூலம் அவர்களது தகவல் தொடர்பை இடைமறித்துக் கேட்டபோது இது தெரிய வந்தது.
பொதுவாக, கடத்தல்காரர்களின் படகை கடலோரக் காவல்படை துரத்தினால், அவர்கள் தங்களிடம் இருக்கும் பொருள்களைக் கடலில் வீசிவிட்டு சரணடைவர். யாரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். ஆனால், அந்தப் படகில் இருந்தவர்களோ வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர். இதிலிருந்தே அவர்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது. அரசுக்கு கிடைத்த ஆதாரங்களும் இதைத்தான் தெரிவிக்கின்றன.
இந்த ஆதாரங்களை நமது அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆய்வு முடிந்ததும், அது தொடர்பான விவரங்களை 2-3 நாள்களில் நாங்கள் வெளியிடுவோம் என்றார் பாரிக்கர்.
2ஆவது படகு: வெடித்துச் சிதறிய படகுடன் 2ஆவது படகு இருந்ததா என்பது குறித்து பாரிக்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “பாகிஸ்தான் பகுதிக்குள் அந்தப் படகு இருந்தது’ என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் தீயசக்திகளை ஊடுருவச் செய்வதற்காகவே பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. தீய சக்திகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே அத்தாக்குதல் நடத்தப்படுகிறது என்றார்.
பின்னணி: பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து படகு மூலம் பயங்கரவாதிகள், இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வருவதாக உளவுத் துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில், குஜராத் மாநிலம், போர்பந்தர் அருகே மர்மப் படகு வருவதை கடந்த மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு கண்டறிந்த கடலோரக் காவல் படையினர், அதைத் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர். ஆனால், அதில் இருந்த 4 பேரும், படகின் கீழ் பகுதிக்குச் சென்று, படகை வெடிவைத்து தகர்த்தனர். இதையடுத்து, மும்பை தாக்குதல் போன்ற சதித்திட்டத்தை முறியடித்து விட்டதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்தனர்.
-http://www.dinamani.com