புதுடில்லி:உள்நாட்டுப் பாதுகாப்பில் யாருடனும் எவ்வித சமரசமும் செய்து கொள்ள வேண்டாம்’ என மத்திய உளவுத் துறை, துணை ராணுவப் படைகள் ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
“ரா’ இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பு, “ஐ.பி.’ மத்திய உளவுத் துறை, இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை ஆகியவற்றின் புதிய தலைமை அதிகாரிகளாகப் பொறுப்பேற்றவர்களுடன் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டில்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அருணாசல பிரதேச எல்லையில் சீன படைகளின் அத்துமீறிய ஊடுருவல் நடவடிக்கைகள், ஒடிசா,மேற்கு வங்கம், அசாம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.
துணிச்சலுடன் செயல்படுங்கள்: இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “”பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக் கூடாது. பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, வடகிழக்கு மாநிலங்கள், தென் மாநிலங்கள் ஆகியவற்றில் வேரூன்றி வரும் மாவோயிஸ்டுகளானாலும் சரி, அவற்றை எவ்வித சமரசமுமின்றி எதிர்கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் உறுதியாக இருப்பதால் துணிச்சலுடன் செயல்படுங்கள். விரைவில் அனைத்து மாநில காவல் துறை புலனாய்வு, உளவுப் பிரிவுகளின் தலைவர்களை அழைத்து டில்லியில் ஆலோசனை நடத்த உள்துறைச் செயலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
-http://www.dinamalar.com