காஷ்மீரில் தொடரும் ஷெல் தாக்குதல்: ‘பொதுமக்கள் வெளியேறுகின்றனர்’

kuldeep

பொதுமக்கள் வாழும் பகுதியில் விழுந்த ஷெல் ஒன்று

 

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில், கட்டுப்பாட்டுக் கோட்டின் பாகிஸ்தானப் பகுதியிலிருந்து தொடரும் ஷெல் தாக்குதல்களிலிருந்து தப்ப, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டதாக இந்தியா கூறுகிறது.

ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், ஒரு பெண் மோசமாகக் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் கடந்த ஒரு வார காலமாக பரஸ்பரம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுவருகின்றன.

வன்முறைக்கு பரஸ்பரம் மற்ற தரப்பின் மீது அவை பழி சுமத்திவருகின்றன.

அணு வல்லமை பெற்ற இந்த இரு நாடுகளுக்கிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்டில் அமைதிப்பேச்சுவார்த்தைகளை ரத்து செய்ததிலிருந்தே, பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

-BBC

இந்திய எல்லைக் கிராமங்கள் மீது பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல்: 10,000 பேர் வெளியேற்றம்

  • சம்பாவில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தரைமட்டமான வீடு.

    சம்பாவில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தரைமட்டமான வீடு.

  • பாகிஸ்தான் படையினர் வீசிய சிறிய ரக குண்டுகளை காண்பிக்கிறார் முதியவர் ஒருவர்.

    பாகிஸ்தான் படையினர் வீசிய சிறிய ரக குண்டுகளை காண்பிக்கிறார் முதியவர் ஒருவர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா, சம்பா மாவட்டங்களில் எல்லையோரத்தில் உள்ள 60 இந்தியக் கிராமங்கள், ஏராளமான ராணுவச் சாவடிகள் மீது பாகிஸ்தான் படையினர் விடிய விடிய சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 10,000 பேர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து கதுவா மாவட்ட காவல் துறை உதவி ஆணையர் ஷாகித் இக்பால் சௌதரி, பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

கதுவா மாவட்டத்தில் 50 கிராமங்கள், ராணுவச் சாவடிகளை குறிவைத்து, பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை இரவு 11 மணி வரை தாக்குதல் நடத்தினர். பின்னர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தங்களது தாக்குதலை மீண்டும் தொடங்கினர்.

இதில், ஹீராநகர் பகுதிக்கு உள்பட்ட ஷேர்பூர், சக்ரா, லச்சிபூர், லோந்தி ஆகிய இடங்களில் ஏராளமான பீரங்கிக் குண்டுகள் வந்து விழுந்தன. பாகிஸ்தான் வீசிய குண்டுகள், இந்தியப் பகுதிக்குள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு வரை வந்து விழுந்தன.

இதைத் தொடர்ந்து, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) பதிலடி கொடுத்தனர். இந்தப் பதில் தாக்குதல், செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை நீடித்தது என்றார் அவர்.

பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து சம்பா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அனில் மல்ஹோத்ரா தெரிவிக்கையில், “சம்பா மாவட்டத்தில், 10 முதல் 12 கிராமங்களையும், ஏராளமான ராணுவச் சாவடிகளையும் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் இரவு 10.30 மணி வரை தாக்குதலை நடத்தினர்; இந்தத் தாக்குதல்களில், யாரும் உயிரிழக்கவோ, காயமடையவோ இல்லை’ என்றார்.

பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதால் அச்சமடைந்த எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 10,000 பேர், தங்களது வசிப்பிடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறினர். இவர்களில், 7,500 பேர் கதுவா, சம்பா மாவட்டங்களில் அரசு அமைத்துள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு பிஎஸ்எஃப் எச்சரிக்கை

“எல்லைப் பகுதிகளில், இந்தியா அமைதியையே விரும்புகிறது; அதேசமயம், இந்தியப் பகுதிகள் மீது தாக்குதல் தொடர்ந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்’ என்று பாகிஸ்தானுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஜம்முவில் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநர் டி.கே. பதக் தெரிவித்ததாவது:

இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் கடைசியாக கடந்த 1ஆம் தேதி பேசினர். அப்போது 4 முதல் 5 முறை பேசினோம். ஆனால், அதன்பிறகு பாகிஸ்தானுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டிய இந்திய -பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுவதையே பிஎஸ்எஃப் விரும்புகிறது. ஆனால், நம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக எல்லைப் பகுதியில் ஏராளமான பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளனர். குடியரசுத் தினத்துக்கு முன்னதாக அவர்களின் ஊடுருவல் முயற்சிகள் அதிகரிக்கலாம் என்றார் அவர்.

இதனிடையே, சம்பா பகுதியில் பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர் தேவேந்தர் சிங்கின் உடலுக்கு பதக் மரியாதை செலுத்தினார்.

-http://www.dinamani.com

TAGS: