மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 08.01.2014 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இப்பிரபஞ்சத்தில் சூரியன் மற்றும் விண்மீன்களில் இருந்து நாள்தோறும் வெளியேறும் பலகோடி நியுட்ரான்களான அணுத் துகள்களை ஆய்வு செய்து சூரியன் உள்ளிட்ட விண்வளிக் கோள்களின் இரகசியங்களை ஆய்வு செய்து அறியப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு, பூமிக்கு அடியில் பாறைகளை உடைத்து பிரமாண்டக் கருவிகள் மூலம் இந்த அணுத் துகள்களை உள்வாங்கி ஆய்வு செய்வது தான் நியூட்ரினோ திட்டம் ஆகும்.
இத்தாலி நாட்டில் கரோம் ஜாஷோ பகுதியில் அமைக்கப்பட்டு, அங்கு ஏற்பட்ட அணுக்கசிவு விபத்தால் உயிர்ச்சேதம், இயற்கை அழிவும் நேர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது நமக்கு சரியான எச்சரிக்கை ஆகும்.
தற்போது தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் மத்திய அரசு திட்டமிட்டுள்ள நியூட்ரினோ, உலகிலேயே மிகப்பெரிய அளவிலான ஆய்வு மையமாகப் போகிறது. முதலில் இமயமலையில் இந்தத் திட்டத்டத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர், அதனைக் கைவிட்டு, அÞஸாமிலும், கேரளாவிலும் அமைக்கத் திட்டமிட்டு அங்கு ஏற்பட்ட எதிர்ப்பால் கைவிட்டு, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் சிங்கார் பகுதியில் அமைக்கத் திட்டமிட்டு, வனவிலங்கு சரணாலயம் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக அதுவும் கைவிடப்பட்டு, தற்போது தேனி மாவட்டம், போடி- பொட்டிப்புரம் அருகில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது பேரழிவைத் தரும் என்று 2009 இல் இருந்து இதனை எதிர்த்து வருகிறேன்.
இப்போது தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிப்புரம் மலைத் தொடரான ஐம்பது ஊர் உள்ள அப்பர் கரடுமலை என்று மக்கள் அழைக்கும் பகுதியை இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் தேர்வு செய்து இருக்கின்றது.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்காக மலை உச்சியில் இருந்து 1.5 கிலோ மீட்டர் ஆழத்தில், 400 அடி நீளம் 80 அடி அகலம் கொண்ட சுரங்கம் அமைக்கப்படும். அதை ஒட்டியே 170 அடி நீளம், 38 அடி அகலம், 15 அடி உயரம் கொண்ட மற்றொரு குகைச் சுரங்கமும் அமைக்கப்படுகின்றது. சுமார் 2.5 இலட்சம் கன சதுர மீட்டர் அனவுக்கு சுரங்கம் தோண்டுவதற்காக மலையை வெடி வைத்துத் தகர்க்கும்போது அந்த வட்டாரம் முழுவதும் பூமி அதிர்ச்சி ஏற்படுவதைப் போலக் குலுங்கும். மலையைத் துளைக்கும் கனரக வாகனங்களும் ராட்சச இயந்திரங்களும் பேரிரைச்சலுடன் ஊர்களுக்குள் வந்துபோக சாலை அமைக்கவும், கழிவுகளைக் கொட்டவும் விவசாய நிலங்கள் கட்டாயமாகக் கையகப்படுத்தப்படும நிலை ஏற்படும். இதனால் தேனி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் அடியோடு நாசமாவதுடன் விவசாயிகள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துவிடும் நிலை ஏற்படும்.
தமிழகத்தின் பொருளாதாரத்தையும், இயற்கை வளத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள மலைவளம், நிலவளம், நீர்வளம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கித் தமிழகத்தையே பாழ்படுத்த இந்துத்துவா அமைப்புகளின் பின்னணியில் நரேந்திர மோடி அரசு ஒரு வஞ்சகத் திட்டத்தோடு ஒன்றன் பின் ஒன்றான செயல்களில் ஈடுபட்டுள்ளது. 1200 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு எடுத்து இருக்கின்றது.
நியூட்ரினோ திட்டம் குறித்த அனைத்து ஆய்வு அறிக்கைகளையும் நான் படித்தபோது என் மனம் பதறுகிறது. இயற்கை தந்த அருட்கொடையான பசிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் எட்டு இலட்சம் டன் பாறைகளை உடைக்கவும், அதற்கு 1000 டன் ஜெலட்டின் வெடிமருந்து பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 70 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அணைகள் நொறுங்கும் விதத்தில் நிலை நடுக்கம் ஏற்படும். பல லட்சம் டன் நச்சுத் துகள்கள் கலந்த புகை காற்று மண்டலத்தில் பரவும். கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் பெரும் அழிவுக்கு ஆளாக நேரிடும்.
முல்லைப் பெரியாறு அணையால் கேரளத்தின் எந்தப் பகுதிக்கும் எந்த ஆபத்தும் ஒருகாலும் ஏற்படாது. ஆனால், கேரள மக்களிடம் தவறான தகவலை சில அக்கறையுள்ள சக்திகள் திட்டமிட்டு பென்னிக் குயிக் அணைக்கு ஆபத்து என்று பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், உண்மையில் நியூட்ரினோ திட்டத்தால்தான் இடுக்கி அணைக்குப் பெரும் ஆபத்து வரப்போகிறது. எனவே எனது கேரளத்து அரசியல் கட்சிகளையும், சகோதரர்களையும் வேண்டுகிறேன். பேரழிவை ஏற்படுத்தப்போகும் நியூட்ரினோ திட்டத்தால் வேகமாக நெருங்கி வரும் ஆபத்தைத் தடுக்க தமிழக மக்களும், கேரள மக்களும் இணைந்து போராட வேண்டுகிறேன்.
நியூட்ரினோ வேலையைத் தொடங்கவே விடக்கூடாது. எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் எனக்கருதி, இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு வேகமாக முடுக்கிவிட்டு இருக்கின்றது.
உதவாதினி தாமதம் என்ற உணர்வோடு அரசியல் கட்சி, சாதி, மதம் கடந்து தமிழக மக்கள் குறிப்பாக தேனி மக்களை, அதிலும் குறிப்பாக போடி, தேவாரம் பகுதி மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். ஊர்க்கோடியில் தீ பிடித்தால், ஊரே திரண்டு திரண்டு நெருப்பை அணைக்க எப்படி விரைவார்களோ, அதுபோல நாம் எழ வேண்டும். கண் கெட்டபின் சூரிய வணக்கம் செலுத்தி என்ன பயன்?
நியூட்ரினோ திட்டத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. இத்திட்டத்தைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசின் நிர்வாகம் எந்த விதத்திலும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது.
முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க ஏற்கனவே நான் அறிவித்துள்ள ஜனவரி 12 கம்பம் அறப்போர், நியூட்ரினோவை முழு மூச்சாக எதிர்ப்பதையும் இலக்காகக் கொண்டு என் தலைமையில் நடைபெறும்.
விவசாயிகள் மட்டும் அல்லாது அனைத்துத் தரப்பு பொதுமக்களும் ஆதரவு தர வேண்டுகிறேன். வாலிபர்கள் பெருமளவில் பங்கேற்க அழைக்கின்றேன்.’’ இவ்வாறு கூறியுள்ளார்.
-http://www.nakkheeran.in/