நேதாஜி குறித்த ரகசியம் வெளியானால் சர்வதேச உறவுகள் பாதிக்கும்: மத்திய அரசு

Netaji_Subhas_Chandra_Boseநேதாஜி குறித்த உண்மை வெளியானால் சர்வதேச உறவுகள் பாதிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவ படையை நிறுவினார்.

ஜேர்மன் நாட்டின் உதவியுடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் அவர் மாயமானார். அவர் விமான விபத்தில் உயிரிழந்தாக ஒரு தகவல் கூறுகிறது. அவர் என்ன ஆனார் என்பது குறித்த 82 ரகசிய கோப்புகள் மத்திய அரசிடம் உள்ளன.

அவை அனைத்தும் பிரதமர் அலுவலக ஆலோசனைக்குப் பிறகு, இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், நேதாஜி குறித்த ரகசிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று கடந்த மாதம் ராஜ்யசபையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து 82 ரகசிய கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

அவற்றை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான இந்தியாவின் சர்வதேச உறவுகளை பெருமளவு பாதிக்கும் என்று இந்திய வெளியுறவு துறை கருத்து தெரிவித்துள்ளது.

இதனால், இந்தியாவுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதனால், அந்த ஆவணங்கள் அனைத்தும் இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டன என்று மத்திய அமைச்சர் ஹரிபாய் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: