இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என புதிய அதிபர் மைத்ரி பாலா சிறீசேனாவுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி (திமுக): இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு யார் பொறுப்பு என்பதை எண்ணிப் பார்த்து இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும். போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சவை விசாரிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். இப்போதும் வலியுறுத்துகிறோம்.
வைகோ (மதிமுக): என்றாவது ஒரு நாள் அறம் வெல்லும். அநீதி அழியும் என்பதை ராஜபட்சவின் தோல்வி நிரூபிக்கிறது. தமிழர்களும், இஸ்லாமியர்களும் ராஜபட்சவுக்கு எதிராக வாக்களித்ததால் மைத்ரி பாலா சிறீசேனா வெற்றி பெற்றுள்ளார். இனப்படுகொலை நடத்தியவர் தூக்கி எறியப்பட்டார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்பது ஒன்றே மகிழ்ச்சி அளிக்கிறது.
ராஜபட்சவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும் என்பது போன்ற தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
விஜயகாந்த் (தேமுதிக): இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச படுதோல்வி அடைந்திருப்பது ஒட்டுமொத்த தமிழினத்துக்கு கிடைத்த வெற்றியாகும். அநீதி இழைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், தமிழர்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தவும் மைத்ரி பாலா சிறீசேனா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: ராஜபட்சவின் தோல்வி இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும், தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்கவும் மைத்ரி பாலா சிறீசேனா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இனப்படுகொலை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான, அமைதியான வாழ்வு கிடைக்க புதிய அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமதாஸ் (பாமக): சிங்களர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ராஜபட்ச அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். தமிழர்களின் வாக்குகள்தான் மைத்ரி பாலா சிறீசேனாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இனப்படுகொலைக்கு காரணமான ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். இனப்பிரச்னைக்கு தீர்வு காண பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஜி. ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): இலங்கை அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அதிபருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என மைத்ரி பாலா சிறீசேனா வாக்குறுதி அளித்துள்ளார். இது நடந்தால் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வழிபிறக்கும்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (காங்கிரஸ்): 10 ஆண்டுகள் அதிபராக இருந்த ராஜபட்ச, சர்வாதிகாரியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். ஆனால், மக்கள் அவரை தோற்கடித்துள்ளனர். இதனை தமிழக காங்கிரஸ் சார்பில் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: இனப்படுகொலைக்கு காரணமான ராஜபட்சவை தோற்கடித்த இலங்கை மக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. மைத்ரி பாலா சிறீசேனாவின் வெற்றி தமிழர்களுக்கு மகிழ்ச்சியானது அல்ல. ஆனால் முதல் கட்டமாக ஜனநாயக வழியில் ராஜபட்சவுக்கு தண்டனை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-http://www.dinamani.com
தொலைந்தான் கொடுங்கோலான் ராஜபக்சே! “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஒரு நாள் தர்மம் வெல்லும்” என்ற மகாகவி பாரதியின் சத்திய சொல் இவனை வீழ்த்தி இருக்க்கிறது. சூது வீழ்ந்தது. தர்மம் நின்றது. நின்ற தர்மம், தொடர்ந்து நிலைபெற புதிய அதிபர் புதிய வியுகம் அமைத்து செயல்பட வேண்டும்.