ஜம்மு-காஷ்மீரில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், அந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
மொத்தம் 87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும் கைப்பற்றின. ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியோ, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள பாஜகவோ இதுவரை ஆட்சி அமைக்க முன்வரவில்லை.
இதனிடையே, மாநிலத்தின் இடைக்கால முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு, மாநில ஆளுநர் என்.என்.வோராவிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த அந்த மாநில ஆளுநர்
என்.என்.வோரா முடிவெடுத்தார். இதுதொடர்பாக தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவர் வியாழக்கிழமை இரவு சந்தித்து கலந்தாலோசித்தார்.
அப்போது ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழ்நிலைகளை விளக்கும் ஆவணங்களை குடியரசுத் தலைவரிடம் அவர் அளித்தார். இதற்கு பிரணாப் முகர்ஜி இசைவு தெரிவித்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் அரசியல் சாசனத்தின் 92-ஆவது பிரிவின் கீழ் அந்த மாநிலத்தில் வெள்ளிக்கிழமை ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பொதுவாக, நாட்டின் பிற மாநிலங்களில் இதுபோன்ற சூழல் நிலவும்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் அந்த மாநிலத்தில் அதற்குரிய சட்ட விதிகளின் கீழ், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த 2002-ஆம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜம்மு-காஷ்மீரில் இதேபோன்ற சூழல் நிலவியது. அப்போது இடைக்கால முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா, பதவி விலகியதை அடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
கடந்த 1977-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, ஆறு முறை ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com