ஆட்சி நடத்தவோ, போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை: அரவிந்த் கேஜரிவால்

“ஆட்சியை திறமையாக நடத்தவோ, வீதியில் இறங்கிப் போராடவோ பாஜகவுக்குத் தெரியவில்லை; ஆனால், இந்த இரண்டையும் நாங்கள் அறிவோம்’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

தில்லியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜரிவாலை மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார். இதுகுறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலையொட்டி அளித்த வாக்குறுதிகள் மூலம்தான் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், பழைய வாக்குறுதிகளை மறந்துவிட்டு பல்வேறு புதிய வாக்குறுதிகளை அளிக்கிறது.

பாஜகவுக்கு திறமையான ஆட்சி செய்யவோ, தர்னா உள்ளிட்ட போராட்டங்களை மேற்கொள்ளவோ தெரியாது. தில்லி மேம்பாட்டுக்காக மக்களவையில் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் நினைவுபடுத்திப் பார்க்கக்கூட மறந்து விட்டார்.

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கடந்த 7 மாதங்களில் செய்த ஒரே சாதனை, ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க உதவியதுதான். இத்திட்டம் வரவேற்கக் கூடியதாக இருப்பினும் ஏழைகள் தொடங்கியுள்ள வங்கிக் கணக்குகளில் சேமிக்க பணம் எங்கிருந்து வரும்? என்பதற்கு மத்திய அரசிடம் விளக்கம் இல்லை.

பாஜகவிடம் கொள்கை ரீதியிலான திட்டங்களோ இலக்கோ இல்லை. ஆகவேதான், எங்களை பொய்யர்கள் என்றும், எங்கள் ஆதரவாளர்களை நக்ஸல்கள் என்றும் முத்திரை குத்தி தனி நபர் தாக்குதலில் முனைப்புக் காட்டுகிறது’ என்றார் கேஜரிவால்.

-http://www.dinamani.com

TAGS: