கறுப்பு பண மீட்பு விவகாரம் மிகவும் சிக்கல் நிறைந்தது:அமித் ஷா

amit_shahபுது டில்லி:வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கும் விவகாரம் மிகவும் சிக்கல் நிறைந்தது என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.டில்லியில் பா.ஜ.க., சார்பில் சட்டமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புபணத்தை மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ.க.,
அரசு எடுத்து வருகிறது.லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலேயே கறுப்புபணத்தை மீட்பதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

மேலும், கறுப்பு பண விவகாரம் தொடர்பாக பெரும்பாலான உலக நாடுகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் பிரதமர் மோடி பெரும் பங்காற்றினார்.இதன் பலனாக, வெளிநாடுகளில் கணக்கு வைத்துள்ள 700 இந்தியர்களின் பெயர்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், இந்த நடவடிக்கைகளை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுக்க தவறிவிட்டது.இந்நிலையில், இந்திய அரசால் மட்டுமே தன்னிச்சையாக செயல்பட்டு கறுப்பு பணத்தை மீட்க முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும்.

குறிப்பாக, சில நாடுகள் தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவும், அவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவும் தயங்குகின்றன.இதுபோன்ற சூழ்நிலைகளால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை மீட்பது சிக்கல்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. சர்வதேச நாடுகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் நமக்கு ஒத்துழைக்க முன்வந்தால் குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளிக்கிறேன்.

முன்னேற்றத்திற்கு எதிர்கட்சிகள்குறுக்கீடு:பார்லிமென்டில், மத்திய அரசு கொண்டு வரும் முக்கியச் சட்டங்களை நிறைவேறவிடாமல் எதிர்க்கட்சிகள் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் அரசுக்கு எதிராக செயல்படவில்லை. மாறாக, நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்கள் குறுக்கே நிற்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

அவர்களின் நடவடிக்கைக்கு பா.ஜ.க.,எப்போதும் அடிபணியாது. இதனை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே முக்கியச் சட்டங்களான நிலம் கையகப்படுத்துதல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றை அவசரச் சட்டங்களாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

-http://www.dinamalar.com

TAGS: