ஐ.நா.சபையின் அலுவல் மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும்: நேபாள துணை ஜனாதிபதி வலியுறுத்தல்

jaaகாத்மாண்டு, ஜன.12- ஐக்கிய நாடுகள்சபையின் அலுவல் மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும் என நேபாள துணை ஜனாதிபதி பர்மானந்தா ஜா வலியுறுத்தியுள்ளார்.

உலக இந்தி தினத்தையொட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய அவர் கூறியதாவது;-

நேபாள மொழிகளுக்கும் இந்திக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. இரண்டுக்குமே சம்ஸ்கிருதம் தான் தாய் மொழி என்பதால் நேபாளத்திலும் இந்தி மொழியை வளர்க்கும் விதமாக இங்குள்ள மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் இந்தியில் பேசுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தியா-நேபாளம் இடையில் உள்ள எல்லைப்பகுதியை சேர்ந்த மக்கள் வெகு சரளமாக இந்தியில் பேசுகின்றனர். இந்தி சேனல்கள் மற்றும் இந்தி சீரியல்கள் இங்கு மிகவும் அதிகமாக விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

முறைப்படி இந்தி கற்றுக் கொள்ளாவிட்டாலும் எனது தாத்தா, அப்பா ரத்தத்தின் மூலம் இந்தி மொழி என் உடலில் கலந்துள்ளது. இந்தி உலக மொழியாக மட்டும் உயரவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்படக்கூடிய மொழியாகவும் அது மாறியுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு நேபாளத்தின் துணை ஜனாதிபதியாக இவர் பதவி ஏற்றுக் கொண்ட விழாவில் உறுதிமொழியை நேபாள மொழிக்கு பதிலாக இந்தியில் ஏற்றுக் கொண்டதற்காக பர்மானந்தா ஜா 6 மாதத்துக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.maalaimalar.com

TAGS: