கச்சதீவில் இந்திய மீனவர்களை சரமாரியாகத் தாக்கிய இலங்கைக் கடற்படை

kachatheevuகச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் தினமும் மீன் பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வருவதாக தெரிவித்தும், போதை பொருட்கள் கடத்தியதாக பழி சுமத்தியும் இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி சிறைபிடித்து செல்வதும் தொடர் கதையாகியுள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 6 சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் 30 பேர் அங்கு வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் அவர்கள் அங்கிருந்த 20 விசைப் படகுகளில் ஏறி ஏற்கனவே மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை மதிப்புமிக்க மீன்களையும் கடலில் தூக்கி எறிந்தனர். வலைகளையும் அறுத்து எறிந்து சேதப்படுத்தினர்.

இலங்கை கடற்படையினர், தொடர்ந்து இந்த பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடித்து செல்வோம் என கூறி அவர்கள் கொண்டு வந்திலுருந்த கல் மர்றும் போத்தல்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கினர்.

இதில் ராமர் என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பீதி அடைந்த மீனவர்கள் உயிர்பிழைத்தால் போதும் என்ற கருதி பாதியிலேயே கரை திரும்பினர்.

இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் கூறுகையில், நாங்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்க கூடாது என்று கூறி வலைகளையும், மீன்களையும் தூக்கி எறிந்து சேதப்படுத்தினர்.

கற்களால் தாக்கியதில் மீனவர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மேலும் அவர்கள் எங்களை பூட்ஸ் காலால் மிதித்து கொடுமைப்படுத்தினர். இதனால் நாங்கள் பாதியிலேயே கரை திரும்பினோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.

இலங்கையில் அண்மையில் நடந்த தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். தமிழர்களின் ஆதரவில் வெற்றி பெற்ற சிறிசேனா ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக மீனவர்கள் மீது நடைபெற்ற கொடூர தாக்குதல் இதுவாகும்.

ஆட்சி மாற்றம் நடந்த பின் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அணுகுமுறை மாறும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என அந்த இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: