புதுடில்லி : வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் சரியான மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, முன்னாள் மத்திய தகவல் துறை கமிஷ்னர் ஷைலேஷ் காந்தி கேட்ட விபரங்களுக்கு பதிலளித்த மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
அரசுக்கு அனுப்பப்பட்ட கேள்விகள் :வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணம் குறித்து பல்வேறு மதிப்புக்கள் கூறப்படுகிறது.வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கறுப்பு பணத்தின் சரியான மதிப்பு என்ன? பல்வேறு காலகட்டங்களில் மதிபப்பிடப்பட்ட அளவுகளா அவை? அப்படியானால் அந்த மதிப்பீட்டு பணியில் எந்தெந்த துறைகள் ஈடுபட்டுள்ளன? என கேட்டு ஷைலேஷ் காந்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய நேரடி வரிவிதிப்பு கழகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் மனு அனுப்பி இருந்தார்.
மத்திய அரசு பதில் : ஷைலேஷ் காந்தியின் மனு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. பின் அது மத்திய நேரடி வரிவிதிப்பு கழகத்திற்கு அனுப்பப்பட்டது. மனுவிற்கு மத்திய நேரடி வரிவிதிப்பு கழகம் அளித்த பதிலில், கறுப்பு பணம் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கறுப்பு பணம் குறித்து இதுவரை சரியாக மதிப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷைலேஷ் கருத்து : மத்திய அரசின் பதில் தன்னை வேதனைப்படுத்துவதாக தெரிவித்துள்ள ஷைலேஷ் காந்தி, வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து சில சி.பி.ஐ., அதிகாரிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இதுவரை நாம் கறுப்பு பணம் குறித்து உண்மையான மதிப்பீடு கூட செய்யவில்லை என்றால், இதுவரை நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்? இதற்கு என்ன அர்த்தம்? நாம் அனைவரும் பறக்கும் காற்றாடி போல் தெளிவற்ற நிலையிலேயே உள்ளோம்.
பல விபரங்கள் மறைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. மீடியாக்களும், அரசியல்வாதிகளும் இதனை திரித்து கூறுகின்றனவா? அல்லது அரசு விழித்துக் கொள்ளமல் உள்ளதா? கறுப்பு பணத்தை மீட்டு, இந்திய மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என மத்திய அரசு கூறியதை நம்பி பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கறுப்பு பணமாக முடங்கி உள்ள அவர்களின் பணம் திரும்ப கிடைக்குமா என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
-http://www.dinamalar.com