பாஜகவில் இணைந்தார் கிரண் பேடி: கேஜரிவாலை எதிர்த்துப் போட்டி?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றவருமான கிரண் பேடி பாஜகவில் இணைந்தார்.

கட்சி மேலிடம் விரும்பினால் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்து அரவிந்த் கேஜரிவால் பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய போது, கேஜரிவாலை கடுமையாக விமர்சித்தவர்களில் கிரண் பேடி முக்கியமானவர்.

மேலும், “எக்காரணத்தைக் கொண்டும் நேரடி அரசியலுக்கு வரமாட்டேன்.

சமூகத்துக்குத் தொண்டாற்ற அண்ணா ஹசாரே போன்ற ஆர்வலர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு குரல் கொடுப்பேன்’ என்று அவர் கூறிவந்தார்.

இந்நிலையில், தில்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, பாஜகவில் கிரண் பேடி வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகச் சேர்ந்தார்.

தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டு பாஜகவில் சேர்ந்தது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

“மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தபோது எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நிர்வாகத்தின் செயல்திறன் எனது சந்தேகத்தை நீக்கியது. அதனால், நான் இனி மக்கள் தொண்டாற்ற மேற்கொள்ள வேண்டிய பாதையை எனது விருப்பத்தின்படியே தேர்வு செய்தேன்.

கேஜரிவாலை எதிர்த்துப் போட்டியிடத் தயார்? பாஜகவில் நான் இணைந்ததால் கட்சிக்கு பலம் கிடைக்கும் என்று மேலிடத் தலைவர்கள் நம்பினர்.

நான் வெற்றி பெறவோ, தோற்கவோ இக்கட்சியில் சேரவில்லை. பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சேர்ந்துள்ளேன்.

-http://www.dinamani.com

TAGS: