திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், ‘திராவிடர் திருநாள்’ – திருவள்ளுவராண்டு 2046 (2015) தை 2, 3, 4 நாட்களில் (சனவரி 16, 17, 18), சென்னையில் நடப்பதாக அறிவித்துள்ளார்கள்.
தமிழர் திருநாள் என்று நீண்ட நெடுங்காலமாக தமிழ் அறிஞர்களாலும், தமிழக அரசியல் தலைவர்களாலும் தமிழ் மக்களாலும் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவரும் பொங்கல் விழா நாட்களைத்தான் புதிதாக வீரமணி அவர்கள் ‘திராவிடர் திருநாள்’ விழா என்று கொண்டாடுகிறார்.
தமிழர் என்ற இயற்கையானதும் நடைமுறையில் உள்ளதுமான இனப்பெயரை மறுத்து, ‘திராவிடர்’ என்ற செயற்கையான பெயரை திணிக்கும் முயற்சியில் திராவிடர் கழத்தின் இன்னொரு செயலே, ‘திராவிடர் திருநாள்’ விழாவாகும்.
திராவிடத்தின் கூறுகளாக வீரமணியார் கூறிக் கொள்ளும், ஆந்திரப் பிரதேசம் – கர்நாடகம் – கேரளம் ஆகிய மாநிலங்களில் திராவிடர் திருநாள் கொண்டாடப்படுகிறதா? திராவிடர் திருநாள் என்ற பெயரில், பொங்கல் விழாவோ, அல்லது வேறு ஒரு விழாவோ நடைபெறுவதில்லை. பின்னர், தமிழ்நாட்டில் மட்டும் ஏமாளித்தமிழர்களின் தலையில் இல்லாத இனப்பெயரான திராவிடர் என்பதை சுமத்த முயல்வது ஏன்? இந்த சூழ்ச்சியின் உள்நோக்கம் என்ன? இது சூழ்ச்சியில்லை என்றால் இதன் நன்னோக்கம் என்ன?
ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை, “பொங்கல் விழா“ என்று உச்சரிக்க விரும்பாமல், ‘மகர சங்கராந்தி’ என்று கூறுகிறார்கள். பெரியாரியவாதிகளான திராவிடர் கழகத்தினர், தமிழர் திருநாள் என்று உச்சரிப்பதை இழிவாகக் கருதி, ‘திராவிடர் திருநாள்’ என்று கூறுகிறார்கள். ஆக, தமிழின மறுப்பில் – அயல் இனத் திணிப்பில், ஆரியமும் பெரியாரியமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை, தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.
காலஞ்சென்ற மூத்த காஞ்சி சங்கராச்சியார் (பெரியவர்), தமிழை நீச பாஷை என்றார். பெரியாரோ, “நான் நாற்பது ஆண்டுகளாக தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி வருகிறேன். வீட்டில் கூட, தமிழை நீக்கிவிட்டு மனைவியிடமும் வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசப் பழகிக் கொள்ளுங்கள்” என்று 1968இல் கூறினார்.
தமிழர்களுக்கு மானத்தையும் அறிவையும் முதன்முதலாக தாம்தான் ஊட்ட வந்ததாக பெரியார் சொல்லிக் கொண்டார். தமிழின மறுப்பும், தமிழ் மொழி எதிர்ப்பும் பெரியாரியத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாக உள்ளது.
தனிமனித சுயமரியாதையை மீட்பதாகச் சொன்னப் பெரியார், தொடர்ந்து தமிழினத்தின் சுயமரியாதையை இழிவுபடுத்தி வந்துள்ளார். இந்த பெரியாரியத்தின் இன்றைய பிரதிநிதியாகத்தான் வீரமணியார் கடந்த சில ஆண்டுகளாக தமிழர் திருநாளை திராவிடர் திருநாளாக திரிபுவேலை செய்து கொண்டாடுகிறார்.
ஆனால், தமக்கு மட்டும் “தமிழர் தலைவர்“ என்று வீரமணியார் பட்டம் போட்டுக் கொள்கிறார். தமிழர் சந்தையில் வணிகம் நடத்த வேண்டும் என்ற வணிக உத்தியைத் தவிர வேறென்ன இந்த “தமிழர்” பட்டத்தில் இருக்கிறது?
ஆரியப் புராணங்களால் முன்வைக்கப்பட்ட சித்திரைப் புத்தாண்டை புறந்தள்ளிவிட்டு, 1921இல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிஞர்களால், தைப் புத்தாண்டு முன்மொழியப்பட்டது. அதை, தமிழின உணர்வாளர்கள் ஏற்று கடைபிடித்து வரும் நிலையில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்மட்டும், தமது விடுதலை ஏட்டில் ‘பெரியாராண்டு’ என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்ற மறுக்கிறார்.
“தமிழைப் பழித்தவனை தாய்தடுத்தாலும் விடேன்” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார். தமிழை – தமிழ் இனத்தை மறுப்பவர்கள் யாராய் இருந்தும், அவர்களை புறந்தள்ளுவது தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்த கருணாக்கள் – டக்ளசு தேவானந்தாக்கள் தவிர எஞ்சியுள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமையும் கடமையும் ஆகும்.
எனவே, 1921ஆம் ஆண்டு மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிஞர்களால் முன்மொழியப்பட்டு பின்னர் தமிழக அரசியல் தலைவர்களால் ஏற்கப்பட்ட, தமிழர்களுக்குரிய பொங்கல் விழா – திருவள்ளுவர் பிறப்பு – தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றைக் குறிக்கும் “தமிழர் திருநாள்” விழாவை, “திராவிடர் திருநாளாகத்” திரிபு வேலை செய்யும் திராவிடக் கூச்சலை, புறந்தள்ளுமாறு தமிழ்ப் பெருமக்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.