வேர்களை வெறுக்கும் விழுதுகள்8: பகையான உறவும்; சிறையான வீடும்

old_age_624

பல முதியவர்களுக்கு வீடே சிறையாகிவிட்டதாக கவலை

 

சொந்தக் குடும்பத்திற்குள், தாம் பெற்ற பிள்ளைகளுடன் வாழும் வயோதிகர்களின் நிலைமை வெளிப்பார்வைக்கு மேம்பட்டதாக தோன்றினாலும், உண்மையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் கூண்டுக்கிளிகளாக, வீட்டுச்சிறையில் வாழ்வதாகவே பல்வேறு களஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய முதியவர்களை அவர்களின் சொந்த குடும்ப உறுப்பினர்களே உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை என்பது முதல், உரிய நேரத்தில் மூன்றுவேளை வயிறார சாப்பாடு கொடுக்காமல் புறக்கணிப்பது வரை இவர்கள் சந்திக்கும் அன்றாட அவமானங்கள் அவர்களின் முதுமை வாழ்வை ஒருவித வீட்டுச்சிறைவாழ்வாக மாற்றியிருப்பதாக வெவ்வேறு அமைப்புகள் செய்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த கருத்தை உறுதிப்படுத்துகிறார் மதுரை மாவட்டம் சாத்தங்குடி கிராமத்து மந்தையில் உட்கார்ந்திருந்த 66 வயதுப்பெரியவர் கருப்பசாமி. தன் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்தபிறகு அவர்களும் அவர்களின் மனைவிகளும் தன்னை உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை என்று கூறினார்.

கருப்பசாமிக்கு அருகே உட்காந்திருந்த அவர் வயதொத்த முதியவர் குருநாதனின் நிலைமையும் அதேதான். தாம் கடந்த ஆறுமாதங்களாக ஒரு நாளைக்கு இருவேளை உணவையே உண்பதாக தெரிவித்த குருநாதன், தனக்கு வேலையும் இல்லாமல், வருமானமும் இல்லாத நிலையில் தனக்கு மூன்றுவேளை சாப்பாடு போட மகன்களோ மருமகள்களோ விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஒருபக்கம் குடும்பத்தாலேயே கொல்லப்படும் அல்லது குடும்பத்தவரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் முதியவர்களின் அவலம் ஒருபுறம் தொடர்ந்தபடியே இருக்கிறது. அப்படி பலவந்தமாக மரணிக்கச் செய்யப்படும் முதியவர்கள் அவலத்துக்கு சற்றும் குறைந்ததல்ல உயிர்வாழும் முதியவர்களின் நிலைமை என்பதே கசப்பான உண்மை.

தேவையான பொருளாதார வசதியுடனும், போதுமான உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கக்கூடிய மிக்க்குறைந்தபட்ச சதவீத முதியவர்களைத் தவிர, பெரும்பான்மையான முதியவர்கள் ஒன்று தமது வாரிசுகளின் வீடுகளில் அவர்களோடு வசிக்கிறார்கள். அல்லது முதியோர் இல்லங்களில் போய் இருக்கிறார்கள்.

இதில் பிள்ளைகளுடன் வாழ நேரும் முதியவர்களின் சிக்கல்கள் மிக மோசமானவையாக இருப்பதாக கூறுகிறார் சென்னையில் இருக்கும் இந்தியாவின் முதியோர் மருத்தவத்தின் முன்னோடியான மருத்துவர் வி எஸ் நடராஜன். வெளியாரிடம் கிடைக்கும் வெற்று கவுரவத்துக்காக, பெற்றோரை தம்முடன் தங்க வைத்துக்கொள்ளும் வாரிசுகள் அவர்களை நடத்தும் விதம் சொல்லி மாளாது என்கிறார் அவர்.

இவரது கருத்தை தமது களஆய்வும் உறுதி செய்வதாக தெரிவித்தா பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முதியோர் பராமரிப்புத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ச அருள்மொழி. நூற்றுக்கு 70 சதவீதமான பெற்றோர் தம் வீடுகளில் ஒருவித சிறைவாழ்க்கை வாழ்வதாக தமது துறை மேற்கொண்ட களஆய்வில் தெரியவந்தது என்றார் அவர்.

முதியோரின் இந்த அதிருப்தியான அவலவாழ்க்கைக்கு இன்றைய சமூக யதார்த்த கள நிலவரங்களும் முக்கியகாரணம் என்கிறார் உளவியல் வல்லுநர் நப்பிண்ணை. இந்த பன்முக சிக்கலை வெறுமனே முதியோர் பார்வையில் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் நப்பிண்ணை வலியுறுத்துகிறார்.

அதேசமயம், அன்றாடம் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளில் கூட இளைய தலைமுறை காட்டும் அலட்சியமும், அகங்காரப்போக்குமே இந்த சிக்கலை அதிகப்படுத்துவதாக வாதாடுகிறார் அருள்மொழி. -BBC

TAGS: