101 நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு முடிவு: நிதின் கட்கரி

“நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் 101 நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

எனது அமைச்சரவை நீர்வழிப் பாதைகளை உருவாக்க அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. நாடு முழுவதிலும் நீர்வழிப் போக்குவரத்துக்கு உகந்த 101 நதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்றும் மசோதாவை கொண்டு வந்து, அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம்.

இதுவரை நீர்வழிப் பாதைகளாக 5 நீர்வழித் தடங்களை மட்டுமே மத்திய அரசு அறிவித்துள்ளது.

சாலைகளில் போக்குவரத்துச் சுமையை குறைக்கவும், நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் எனது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது. நீர்வழிப் போக்குவரத்தில் பொருள்களைக் கொண்டு செல்ல ஒரு கி.மீ. தூரத்துக்கு 50 பைசா மட்டுமே செலவாகிறது. மற்ற போக்குவரத்து முறைகளோடு ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்துக்கு ரூ.1ம், சாலைப் போக்குவரத்துக்கு ரூ.1.50ம் செலவாகிறது.

சிற்றோடைகள், கால்வாய்கள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து பாதையின் நீளம் 14,500 கி.மீ. வரை இருக்கும். எனினும், போக்குவரத்துக்காக இந்தப் பாதைகள் இதுவரை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்றும் திட்டம் மட்டுமல்லாமல், பிரதமரின் “ஜல மார்க்க யோஜனா’ எனும் திட்டத்தைத் தொடங்கவும், துணைத் துறைமுகங்கள் அமைக்கவும் மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது.

5ஆவது தேசிய நீர்வழிப் பாதையை மேம்படுத்த பாராதீப், தாம்ரா துறைமுகங்களுடனும், ஒடிஸா மாநில அரசுடனும் இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணையம் (ஐ.டபிள்யு.ஏ.ஐ.) சமீபத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: