மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை: இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு

india-sri-lanka-flags2இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மங்கள சமரவீரா, தனது முதலாவது வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இந்தியா வந்தார். அவர் புது தில்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மூன்று மணி நேரம் நடைபெற்றது.

இலங்கையில் மைத்ரிபாலா சிறீசேனா தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு அந்த அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக மங்கள சமரவீரா பதவியேற்றார். அவருக்கு, நட்பு நாட்டுத் தலைவர் என்ற முறையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த திங்கள்கிழமை இரவு தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்போது, அவர் விடுத்த அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சமரவீரா புது தில்லி வந்தார். அவரது வருகையை முன்னிட்டு, இலங்கைச் சிறையில் இருந்து 15 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, அமைச்சர் மங்கள சமவீரா ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் புதிய அரசின் திட்டங்கள் குறித்து சுஷ்மா ஸ்வராஜிடம் அவர் எடுத்துரைத்தார்.

பிரதமருக்கு அழைப்பு: மேலும், இலங்கையில் அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள், இலங்கையுடன் இந்தியா மேற்கொண்டுள்ள கூட்டு வளர்ச்சிப் பணிகள், பரஸ்பர ஒத்துழைப்பு, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடியை வருகை தருமாறு கோரும் அழைப்பையும் சுஷ்மா ஸ்வராஜிடம் சமரவீரா அளித்தார்.

இத்தகவலை இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தனது சுட்டுரையில் பதிவு செய்தார்.  இந்தச் சந்திப்பு குறித்து சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக இந்தியாவைக் கருதுவது இந்த நல்லுறவுச் சந்திப்பு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவைக்கும் விவகாரம் குறித்து மீண்டும் பேசுவது குறித்து இந்தச் சந்திப்பின் போது பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகள் அளவிலான கூட்டமும் இந்த மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

இலங்கைக்கு வருமாறு அமைச்சர் மங்கள சமரவீரா விடுத்த அழைப்பையும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஏற்றுக் கொண்டார். அவரது பயணத் தேதி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அமைச்சர் மங்கள சமரவீராவின் அடுத்த வருகை, தில்லியில் நடைபெற உள்ள இந்தியா-இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தின் போது இருக்கும். இக்கூட்டு ஆணையக் கூட்டம் கடைசியாக கடந்த 2012, ஜனவரியில் புது தில்லியில் நடைபெற்றது.

விரைவில் இரு நாட்டு மீனவர்கள் கூட்டம்: மீனவர்கள் பிரச்னையைப் பொருத்தமட்டில், இலங்கையில் பிடித்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மங்கள சமரவீரா சுட்டிக்காட்டினார்.

மேலும், இரு தரப்பு மீனவர்களின் நீண்டகால பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து விவாதிக்க இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தை விரைவில் நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு, நீண்டகாலத் தீர்வு காண இரு நாடுகளுமே விரும்புகின்றன. மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மனிதநேய அம்சங்களைப் பரிசீலித்து, மனிதநேய முறையில் அவற்றைக் கையாள வேண்டும் என்பதை இரு நாடுகளும் புரிந்து கொண்டுள்ளன. இந்தச்சந்திப்பு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா இந்திய வருகைக்கு வழிவகுத்துள்ளது. மேலும், இரு அமைச்சர்களின் சந்திப்பு இரு தரப்பு உறவுகளை மேலும் ஊக்குவிக்கும்.

-http://www.nakkheeran.in

TAGS: