மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற மக்களின் ஆதரவு தேவை: வைகோ

மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் மக்கள் பங்கேற்றால்தான் போராட்டங்கள் வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்கவும், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தொடங்கப்படும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மதிமுக சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

காவிரி பாதுகாப்பு இயக்கம் அரசியல், கட்சி சார்பற்றது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நான். அதன் தலைமையாக இருக்க விரும்பவில்லை. காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் வழக்குரைஞரை அனுப்ப வேண்டிய இடத்தில் சதானந்தா கவுடா உள்ளார். அவரும், அணைகள் கட்டும் விஷயம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் வீட்டில் நடைபெற்ற சதிக்கூட்டத்தில் பங்கேற்றவர் என்பதால், மத்திய அரசிடம் இருந்து நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை.

இதேபோல் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதால் தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்படும். ஆகையால் அதை எதிர்த்தும் போராட உள்ளோம். மீத்தேன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு மௌனமாக இருப்பது புதிராக உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் மே-17-ஆம் தேதி, இயக்கத்தினர் தயாரித்துள்ள மீத்தேன் பாதிப்பு தொடர்பான குறுந்தகடு வெளியிடப்பட உள்ளது. இந்த குறுந்தகடுகள் ஒரு லட்சம் மக்களிடம் விநியோகம் செய்யப்படும். மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றால்தான் போராட்டங்கள் வெற்றி பெறும் என்றார்.

-http://www.dinamani.com

TAGS: