கருப்புப் பணத்தை மீட்பது அவசியம்: பெயர்களை வெளியிடுவது மட்டுமே போதாது – உச்ச நீதிமன்றம்

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளியிடுவதைக் காட்டிலும், இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு திரும்பக் கொண்டு வருவதுதான் மிகவும் அவசியமானது என்று கருதுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கருப்புப் பணம் மீட்பு தொடர்பாக மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் எம்.பி. லோக்குர், ஏ.கே. சிக்ரி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது:

கருப்புப் பணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம், இன்றிலிருந்து 2 வாரங்களுக்குள் தங்களது ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு மனுதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அனுமதியளிக்கிறோம். இதில், வழக்கில் பிரதிவாதியாக தங்களைச் சேர்த்துக் கொண்டவர்களும் அடங்குவர்.

உரிய நேரத்தில் அதுபோன்ற ஆலோசனைகள் அளிக்கப்பட்டதும், அதன்மீது சட்டத்துக்குள்பட்டு பரிசீலனை நடத்தி தங்களது அறிக்கையை ரகசிய உறையில் வைத்து நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) தலைவர், துணைத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக தனது புதிய மனுவில் ராம் ஜேத்மலானி தெரிவித்த ஆலோசனைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து எதுவும் தெரிவிக்காது. அதன்மீது சிறப்புப் புலனாய்வுக் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

அப்போது ராம் ஜேத்மலானி சார்பில் வழக்குரைஞர் அனில் திவான் வாதாடுகையில், “கடந்த 6 மாதங்களில், வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தில் ஒரு பைசா கூட நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை; சில இடங்களில் சோதனை மட்டுமே நடத்தப்பட்டு, சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பிரான்ஸ் அளித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டும் மத்திய அரசின் நிலை குறித்து தனது பதிலை தெரிவிக்க அனில் திவானுக்கு 3 வாரங்கள் அவகாசம் அளித்தனர்.

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடியதாவது:

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், இந்தப் பிரச்னையை முன்வைத்து நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தொடர்ந்து வழக்கு தொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

கருப்புப் பணம் தொடர்பான விசாரணையின்போது யாருடைய பெயராவது தெரிய வந்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களின் பெயரையும் வெளியிட்டு வருகிறோம்.

ஜெனீவா நகரில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் கணக்குகள் மீதான வருமான வரித்துறையினரின் நடவடிக்கையானது, மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்றார்.

அப்போது வழக்குரைஞர் திவான், பிரதிவாதியும் மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் ஆகியோர் குறுக்கிட்டு தெரிவித்ததாவது:

கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடும் நடவடிக்கையானது, கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும், அந்தப் பணத்தை பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல், மனிதர்களைக் கடத்துவதற்காகப் பயன்படுத்துவோருக்கும் அச்சம் தரும் நடவடிக்கையாகவும், தடுப்பு நடவடிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக கணக்கு வைத்திருக்கும் 1,200 இந்தியர்களில் சிலரது பெயர்களை சர்வதேசப் பத்திரிகையாளர்கள் வெளியிட்டுள்ளனர் என்றார்.

அப்போது நீதிபதிகள் தெரிவிக்கையில், “இந்த விவகாரமானது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளியிடுவது தொடர்பானது அல்ல; கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவது தொடர்பானது’ என்றனர்.

முன்னதாக, ராம் ஜேத்மலானி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டுக் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் எழுதியுள்ள கட்டுரை, சிறப்புக் குழுவால் பாஜக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை, மத்திய பாஜக அரசின் தேர்தல் அறிக்கை ஆகியவை அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

-http://www.dinamani.com

TAGS: