கல்வி முழுமையாக காவிமயமாக்கப்படும்: ஹரியாணா அமைச்சர் பேச்சால் சர்ச்சை

“ஹரியாணா மாநில பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கல்வி முழுமையாக காவிமயமாக்கப்படும்’ என அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் விலாஸ் சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கண்டனம் தெரிவித்தார்.

சண்டீகரில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட விழா ஒன்றில் கல்வி அமைச்சர் விலாஸ் சர்மா பேசியதாவது:

அடுத்த கல்வியாண்டில் இருந்து பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை சேர்க்க அரசு முடிவு செய்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர். என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிலர், கீதையை பாடத் திட்டத்தில் சேர்க்கும் முடிவு ஒரு வரலாற்று தொடக்கம் என தெரிவித்தனர்.

எனினும், அரசின் முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் நான் கூறியது என்னவென்றால், “பகவத் கீதையை பாடத் திட்டத்தில் சேர்ப்பது தொடக்கம்தான். பாரத பண்பாட்டையும், நாகரீகத்தையும் கற்பிக்கும் வகையில் விரைவில் கல்வி முழுமையாக காவிமயமாக்கப்படும்’ என தெரிவித்தேன்.

சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் காவி நிறம் தோன்றுகிறது. இறைவனை வழிபடுகிறவர்கள் காவி உடை அணிகின்றனர். தேசிய கொடியிலும் காவி நிறம் இடம்பெற்றுள்ளது.

நமது புராணங்கள், வரலாறு உள்ளிட்டவை சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. எனவே, சம்ஸ்கிருத மொழியை மறுநிர்மாணம் செய்யும் பணியிலும் மாநில அரசு ஈடுபடும் என விலாஸ் சர்மா கூறினார்.

ஹூடா கண்டனம்: அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடா கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பகவத் கீதையை முன்னிறுத்தி அரசியல் நடைபெறுவதை ஏற்க முடியாது. உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது. அது பாஜகவிற்கு மட்டும் சொந்தமல்ல’ என்றார்.

-http://www.dinamani.com

TAGS: