ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? அதிகாரிகளிடம் சகாயம் கேள்வி!

SAGAYAM_2248678f

மதுரை அருகே நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 5வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுக்கா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

கீழவளவு – கீழையூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்தற்கு சுமார் 66 அடி உயரத்திற்கு வில் ஊத்துமலை என்ற மலை இருந்தது. அந்த மலை 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. தற்போது பார்க்கும்போது அது தரைமட்டமாக இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் 40 அடிக்கும் கீழே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனை டாமின் அதாவது தமிழ்நாடு கனிமவள நிறுவனம், ஒப்பந்தக்காரர்களிடம் கிரானைட் குவாரிகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. எனவே டாமின் அதிகாரிகளை நேரடியாக அழைத்த சகாயம், அவர்களிடம் ஒரு சில விசாரணைகளை மேற்கொண்டார்.

இந்த மலை எந்த ஆண்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அளிக்கப்பட்டது. அப்போது இருந்த பரப்பளவு என்ன. தற்போது இருக்கும் பரப்பளவு என்ன. இந்த மலையில் எவ்வளவு வெட்டி எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் டாமின் நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு லாபம் கிடைத்தது என்று வரைபடத்தை வைத்துக்கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

மேலும், அந்த மலையில் வசித்த விலங்குகளுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் உள்ள அளவுகளில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக அறிகிறேன். எனவே இதுபற்றிய முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டாமின் அதிகாரிகளுக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: