இந்தியர்களின் கருப்புப் பணத்துக்கு ஆதாரம் உள்ளது: அருண் ஜேட்லி

“சுவிட்ஸர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை வைத்திருப்பதற்கு இந்தியாவிடம் ஆதாரம் உள்ளது’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

சுவிட்ஸர்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள அவர், டாவோஸ் நகரில் அந்நாட்டின் நிதியமைச்சர் எவலைன் விட்மர்-ஷ்லம்பை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 40 நிமிடங்களுக்கு நீடித்தது. அதைத் தொடர்ந்து, ஜேட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுவிட்ஸர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை வைத்திருப்பதற்கு இந்தியாவிடம் ஆதாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பாக ஆதாரங்களை அளிக்கும்பட்சத்தில், தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்வதாக சுவிஸ் அரசு உறுதி அளித்துள்ளது.

தானாகவே தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, கருப்புப் பண அச்சுறுத்தலைக் குறைக்க உதவும்.

வரி தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தியாவும், சுவிட்ஸர்லாந்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன் தொடர்ச்சியாக, சுவிஸ் அரசுத் தரப்புடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினேன்.

ரகசிய வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கோர நாங்கள் அளிக்க வேண்டிய ஆதாரங்கள் குறித்துப் பேசினோம்.

இது தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்க எங்கள் வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சியெடுத்து வருகின்றனர். இது தொடர்பான பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் தங்களுக்கு சுவிட்ஸர்லாந்தில் வங்கிக் கணக்குகள் உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

தங்கள் நாட்டு வங்கிக் கணக்குகள் தொடர்பாக திருடப்பட்ட தகவல்களை அளித்தால் அது தொடர்பான விவரங்களை அளிக்க முடியாது என்பதே சுவிஸ் அரசின் நிலைப்பாடாகும் என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: