பாகிஸ்தானுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை

புது தில்லி, ஜன.23:  பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த வாரப் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலமாக அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையில், அமெரிக்கா ஒருபோதும் கருணை காட்டாது. பயங்கரவாதத்தால் எழும் அச்சுறுத்தலை முறியடிக்கவே, பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது என்பதையும், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு புகலிடங்கள் அளிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

நியூயார்க்கில் பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தை தகர்த்தபோது, அந்தத் தாக்குதலில் இந்தியர்களும் பலியாகினர். இதேபோல், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்கர்களும் உயிரிழந்தனர். மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை நீதியின் முன் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

பாதுகாப்பு விஷயத்திலும், வாழ்க்கை நடைமுறையிலும் இந்தியர்களோடு அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து நிற்போம் என உறுதிபடக் கூறுகிறேன். அமெரிக்காவின் இயற்கையான கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவுக்கு 2010ஆம் ஆண்டு நான் முதலாவது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குத்தான் முதலில் வந்தேன். அதைத் தொடர்ந்து, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு 2ஆவது முறையாக சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். இதன்மூலம், இந்தியாவில் 2ஆவது முறை சுற்றுப்பயணம் செய்யும் முதல் அமெரிக்க அதிபர் என்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது சந்திப்பை, உறுதியான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன். நமது இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்றில், இது புதிய சகாப்தத்தைத் தொடங்கும் என நம்புகிறேன்.

இந்தியாவில் கடந்த முறை நான் பயணம் மேற்கொண்டபோது, எனது தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டேன். அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால், நம் இடையே நெருக்கம் ஏற்படுவதுடன், இரு நாடுகளுக்கு இடையே உறவை மேலும் விரிவுபடுத்துவதில் நாம் வெற்றி பெற வேண்டும். அதுவரை, அந்த இலக்கை நம்மால் எளிதில் அடைய இயலாது.

மோடியின் வெற்றியும், புதிய சகாப்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கொண்டுள்ள உறுதியும், அமெரிக்கா- இந்தியா இடையே ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது.

அனைத்து விவகாரங்களிலும் ஒத்துப்போகும் இரு நாடுகள் எங்கும் கிடையாது. அதுபோல்தான், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பரஸ்பரப் புரிந்துணர்வு என்ற சாராம்சத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால், அனைத்து வேறுபாடுகளுக்கும் தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

வர்த்தகம், முதலீடு, உயர்நிலை அளவில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இருக்கும் தடைக்கற்களை குறைத்துக் கொள்வதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதுள்ளது. இந்தியாவில் உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் உதவி செய்யத் தயாராக இருக்கின்றன.

மோடிக்குப் பாராட்டு: தேநீர் விற்பனையாளராக இருந்து பிரதமராகியிருக்கும் மோடியின் வாழ்க்கையில் இருந்து, இந்தியாவில் சாதாரண மக்களால் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பது தெளிவாகிறது. மிகப்பெரிய குறிக்கோள்களை இந்தியா அடைவதற்கான தெளிவான திட்டம் மோடியிடம் உள்ளது.

எதிர்காலத்தில் அனைவரும் கண்ணியமாக, வளமாக, பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்றார் ஒபாமா.

தில்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெறும் இந்தியக் குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக வரும் 25ஆம் தேதி அவர் தில்லிக்கு வருகிறார். இதையொட்டி, தில்லி, ஒபாமா சுற்றுப்பயணம் செய்யும் ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

-http://www.dinamani.com

TAGS: