கருப்பு பணம் மீட்பு குறித்த நடவடிக்கையை தெளிவுபடுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு வாசன் கோரிக்கை

GKVasanசென்னை, ஜன.24- தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்களுடைய பணத்தை இந்தியாவிற்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் கொண்டுவருவோம் என்று பா.ஜ.க.வும், மோடியும் தேர்தல் நேரத்திலே மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து சுமார் 8 மாதங்கள் கடந்தும் இன்று வரை அதை பற்றி மத்திய அரசும், பிரதமர் மோடியும் மவுனம் காத்து வருகிறார்கள்.

கருப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுவது மட்டும் போதாது, கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவருவதே முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவதற்கு முழு முயற்சியை எடுத்ததாக தெரியவில்லை. பா.ஜ.க.வினர்; தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்த பிறகு மறந்துவிட்டனர். எனவே கருப்பு பணத்தை மீட்டுதருவோம் என்று அவர்கள் அளித்த வாக்குறுதியும், அவர்கள் நினைவில் இருப்பதாக தெரியவில்லை.

எனவே, கருப்பு பணம் திருப்ப கொண்டுவருவது சம்பந்தமாக இதுவரை மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-http://www.maalaimalar.com

TAGS: