ஜம்மு:எல்லைத் தாண்டிய சக்திகளால் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தடையாக இருக்கின்றன என அந்த மாநில கவர்னர் வோரா தெரிவித்தார்.இதுகுறித்து ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில், நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து வோரா கூறியதாவது:ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு, எல்லைத் தாண்டிய எதிர்மறை சக்திகளும், அமைதி, சகஜநிலையை ஏற்படுத்த எழும் தொடர் சவால்களும் தடையாக இருக்கின்றன.மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதி, சட்டம் – ஒழுங்கு நிலையை பேணுவது மிகவும் முக்கியமானதாகும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும், சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சிகளும் கண்டிக்கத் தக்கவை. எல்லை நெடுகிலும் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் உள்ள கிராம மக்களின் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாதுகாப்புப் படையினர், மாநில பாதுகாப்புக்காக மனப்பூர்வமாக பணியாற்றியதும், தேசத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் கொண்டுள்ள உறுதிப்பாடும் பாராட்டத்தக்கது என்று கூறினார்.
-http://www.dinamalar.com