குழந்தைகள் கடத்தல் விவகாரம்: மத்திய அரசின் செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி

குழந்தைகள் கடத்தலையும், அவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதையும் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தேவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

குழந்தைகள் கடத்தலையும், அவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதையும் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிறப்பிக்கபட்ட உத்தரவை, மாநில அரசுகளுக்கு டிசம்பர் 12-ஆம் தேதிதான் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த மெத்தனப்போக்கு கவலையளிப்பதாக உள்ளது.

மேலும், அந்த உத்தரவை செயல்படுத்தாத மாநில அரசுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, திரும்பத் திரும்ப கடிதத்தை மட்டும் மத்திய அரசு எழுதி வருகிறது.

இந்த விவகாரத்தில், இயந்திரத்தனமாக கடிதங்கள் எழுதுவது மட்டும் போதாது. மாநில அரசுகளின் பதில் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவற்றின் மீது மத்திய அரசு உடனே உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்தப்படுவதை தடுக்கவும், அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், பல மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுக்கள் பெயரவிலேயே செயல்படுகின்றன என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.கே.கெளல் நீதிமன்றத்தில் கூறுகையில், “நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், சில மாநிலங்கள் இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை மத்திய அரசுக்கு அளிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வருகிற மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-http://www.dinamani.com

TAGS: