தில்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு செல்வாக்கு அதிகரிப்பு: களத்தில் இறங்கினார் அமித்ஷா

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து வெளியேறிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்து தில்லியில், காங்கிரஸ் ஆதரவும் கடந்து தேர்தலில் ஆட்சியைப்பிடித்தார். அவருடன் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்த கிரண் பேடி, சமீபத்தில் திடீரென பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தற்போது அவரும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவில் சேர்ந்தவுடன் கிரண்பேடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தில்லி பாஜக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பிரசாரங்களில் மோடியுடன் சேர்த்து அவரது படங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதனால் மற்ற தலைவர்கள், கட்சி தலைமையிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதனிடையே  தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு பெருகிவருவதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஜகவிற்கு இரண்டாம் இடம் தான் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு  கட்சிக்காக பாடுபட்டவர்கள் முன்னிலைப்படுத்தப்படாமல் திடீரென கிரண்பேடி முன்னிலைப்படுத்தப்பட்டதே காரணம் என்றும் கூறப்பட்டது.

பாஜக தலைவர்கள் , தங்களுக்கு முக்கியம் இல்லாதது குறித்து கட்சி தலைமையிடம் ஆதங்கப்பட்டதுடன், தங்களது அதிருப்தியையும் வெளியிட்டனர். இதனையடுத்து தில்லி தேர்தல் பிரசாரத்தில் பெரும் மாற்றங்களை அமித் ஷா கொண்டுவந்துள்ளார். பாஜக பிரசார போஸ்டர்களில் கிரண்பேடி படம் நீக்கப்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் வேட்பாளர் ஆகியோர் படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அனைத்து தொகுதியிலும் கிரண்பேடி பிரசாரத்துக்கு செல்வது நிறுத்தப்பட்டு அவர் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து அமித்ஷாவே நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட்டுளளார்..நேற்று நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் கெஜ்ரிவாலை, அமித் ஷா கடுமையாக தாக்கிப்பேசினார். மாற்றி மாற்றி பேசுபவர் என்று குற்றம்சாட்டினார். மேலும் நேற்று நடந்த அமித் ஷாவின் பிரசார கூட்டத்துக்கும் கிரண்பேடி அழைக்கப்படவில்லை. இதையடுத்தே அவருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது ஊடகங்களில் தற்போது விவாதிக்கப்படுகிறது.

தில்லி சட்டசபை தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி இன்று வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில், பெண்களின் பாதுகாப்புக்காக தில்லி முழுவதும், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படும் என்றும், 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்றும், பல்வேறு வாக்குறுதிகளை கூறியுள்ளது.

அதேநேரம் பாஜக தேர்தல் அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடவில்லை. தில்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்.7ம் தேதி நடக்கிறது. இந்த ஒரு வாரத்தில் 250 பொதுக்கூட்டங்களுக்கு பாஜக ஏற்பாடு செய்துவருகிறது. பல்வேறு முக்கிய அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பிரதமர் மோடியும் நான்கு கூட்டங்களில் பேசவுள்ளார். இவ்வளவு பிரசார ஏற்பாடுகளுக்கு முக்கிய காரணம், கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மிக்கும் ஆதரவு அதிகரித்து வருவதாக வெளியான தகவலே காரணம் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் தில்லி சட்டசபை தேர்தல் பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது உறுதி என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-http://www.dinamani.com

TAGS: