தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுக் கூட்ட முடிவுகள்:
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் இரண்டாவது கூட்டம், சனவரி 30 – 31 ஆகிய நாட்களில், மதுரையில் நடைபெற்றது. மதுரை சர்வேயர் காலனியில், முத்துக்குமார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, பழ.இராசேந்திரன், குழ.பால்ராசு, மதுரை அ.ஆனந்தன், மதுரை செ.இராசு, ஓசூர் கோ.மாரிமுத்து, பெண்ணாடம் க.முருகன், சென்னை க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மதுரை மேரி, பரமக்குடி இளங்கோவன், நெல்லை க.பாண்டியன், தூத்துக்குடி மு.தமிழ்மணி, திருச்சி மூ.த.கவித்துவன், எழுத்தாளர் இராசாரகுநாதன், சிதம்பரம் கு.சிவப்பிரகாசம், பழ.நல்.ஆறுமுகம், கோவை இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் மறைவுற்ற தமிழறிஞர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. அரசியல் அறிக்கையை பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன் வைத்தார். அமைப்பு அறிக்கையை தலைவர் தோழர் பெ.மணியரசன் முன்வைத்தார். விவாதங்களுக்குப் பின் அவை ஏற்கப்பட்டன. கூட்டத்தின் நிறைவில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
1. காவிரியைத் தடுக்க அணை கட்டப்படும் மேகேத்தாட்டுக்குச் சென்று முற்றுகைப் போராட்டம்
ஆடுதாண்டு காவிரி என்று அழைக்கப்படும் மேகேதாட்டுப் பகுதியில் 48 ஆ.மி.க. கொள்ளவு கொண்ட இரு அணைகள் காவிரியின் குறுக்கே கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரமால் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், காவிரித் தீர்ப்பாயம் ஆகிய நீதித்துறை தலைமை அமைப்புகளின் ஆணைகளைத் துச்சமாகத் தூக்கியெறிந்து தமிழர்களுக்கு எதிராக இனப் பகையோடு செயல்படும் கர்நாடக அரசின் இன்னொரு அட்டூழியம் தான் புதிய அணைகள் கட்டும் திட்டம். இரு அணைகளும் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு உபரி வெள்ளமாக வராமல் கர்நாடக அரசால் தடுக்க முடியும்.
அதன் பிறகு தமிழ்நாட்டில் 24,00,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாலை நிலம் ஆவதுடன், காவிரியால் குடி நீர் பெறும் 20 மாவட்டங்களில் உள்ள பல கோடி மக்கள் குடி நீர் இன்றி பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள். எனவே, இத்திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதிலும் பரப்புரை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான உழவர்களையும் பொது மக்களையும் திரட்டி, 2015 மார்ச் 7 அன்று, ஒகேனக்கலில் தொடங்கி பேரணியாகச் சென்று ஆடுதாண்டு காவிரியில் அணைக்கட்டும் இடத்தை முற்றுகையிடுவதென காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள், திரளாகப் பங்கேற்கவும், அதற்காக தமிழகம் முழுவதும் பரப்புரைகள் நடத்தவும், இப்பொதுக்குழுத் தீர்மானிக்கிறது.
2. தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டு மாதங்களுக்குள் தமிழை அலுவல் மொழியாக ஆக்கிட வேண்டும். இல்லையேல் மக்கள் திரள் போராட்டம்!
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 1965 சனவரி 26 முதல் இந்தி மட்டுமே, நடுவண் ஆட்சி மொழி என்று அரசமைப்புச் சட்டப்படி இந்தித் திணிக்கப்பட இருந்ததை எதிர்த்து, 1965 சனவரி 25 அன்று வெடித்தது தமிழகந்தழுவிய இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்.
1965 சனவரி 26இல் கோடம்பாக்கம் சிவலிங்கம் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்தார். மறுநாள், சனவரி 27 அன்று காலை விருகம்பாக்கம் அரங்கநாதன் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து மாய்ந்தார். இவ்விரு தழல் ஈகியர்க்கும் முன்னோடியாக, 1964 சனவரி 25இல் கீழப்பழூர் சின்னச்சாமி தீக்குளித்து மாய்ந்தார். 1965 மொழிப்போரில் தீக்குளித்தும், நஞ்சுண்டும் சற்றொப்ப 10 பேர் உயிர் நீத்து, இந்தித் திணிப்பை எதிர்த்தனர். பேரணியாக வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது 1965 சனவரி 27இல், காட்டுமிராண்டித்தனமாக காங்கிரசு ஆட்சிக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், முதல் களப்பலியாக மாணவன் இராசேந்திரன் உயிரீகம் செய்தான். அதைத் தொடர்ந்து, இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் 50 நாட்கள் போர்க்கோலம் பூண்டது. சற்றொப்ப 300 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இறுதியில், அன்றையத் தலைமையமைச்சர் லால் பகதூர் சாத்திரி, வானொலியில் தமிழக மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஆற்றிய உரையில், இந்தி மட்டும் ஒற்றை ஆட்சி மொழியாகத் திணிக்கப்படமாட்டாது, இணை ஆட்சி மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றார். அதன்பிறகு, மாணவர் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி 1967இல் தோற்கடிக்கப்பட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தமிழ்நாட்டில் பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி நீக்கப்பட்டது. மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடந்த இந்த மொழிப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு நினைவேந்தல், இவ் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சனவரி 25இல் மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில், 1938இல் பாடத்திட்டத்தில் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்துப் போராடி சிறை சென்று உயிர் நீத்த தாளமுத்து – நடராசன் ஆகியோருக்கும் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.
மொழிப் போர் 50ஆம் ஆண்டையொட்டி, 1938 தொடங்கி 1965 ஆண்டு உட்பட உயிர் நீத்த அத்தனை மொழிப் போர் ஈகியருக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு வீரவணக்கம் செலுத்துகிறது.
இந்த 50ஆம் ஆண்டு முழுவதும், தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பையும், ஆங்கில ஆதிக்கத்தையும் எதிர்த்து முறியடித்திடவும் இங்கு தமிழே அனைத்து வகைக் கல்வியிலும் பயிற்று மொழி, தமிழக அரசு மற்றும் நடுவண் அரசு நிறுவனங்களிலும் அலுவல் மொழி என்பதை நிலைநாட்டிட, மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துவதென்று இப்பொதுக்குழு முடிவு செய்கின்றது.
தமிழ்நாட்டிலுள்ள வங்கி, வாழ்நாள் காப்பீட்டுக் கழகம், வரிவசூல் அலுவலகங்கள், தொடர்வண்டித் துறை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நடுவண்அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலம் இங்கு அலுவல் மொழியாக இருப்பதை நீக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள இந்நிறுவனங்கள், தங்களது தலைமைக்கு அனுப்பக்கூடிய அறிக்கைகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றவகையில், அனைத்தும் தமிழில்தான் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, தமிழகத்திலுள்ள நடுவண் அரசு அலுவலகங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வருகின்ற 2015 பிப்ரவரி 7ஆம் நாளுக்குள், வேண்டுகோள் கடிதங்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் அந்தந்த தலைமை நிர்வாகிகளிடம் நேரில் வழங்கப்படும். இரண்டு மாதத்திற்குள், இந்த நிறுவனங்களும் அலுவலகங்களும் தங்களின் நிர்வாக மொழியாக தமிழை மாற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படும். 2015 ஏப்ரல் 7ஆம் நாளுக்குள், தமிழை அலுவல் மொழியாக்காத நடுவண் அரசு அலுவலங்கள் மற்றும் நிறுவனங்களின் அயல் மொழி ஆதிக்கப்போக்கைக் கண்டித்து, மக்கள் திரள் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.
3. தஞ்சையிலுள்ள தழல் ஈகி முத்துக்குமார் சிலையை அகற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்!
தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம் – சாணூரப்பட்டியில், தஞ்சை திருச்சி நெடுஞ்சாலையில், தழல் ஈகி முத்துக்குமார் சிலை, தனியாருக்கு சொந்தமான இடத்தில் மதுரை உயர் நீதிமன்ற ஆணை பெற்று, 29.01.2011 அன்று, தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி)யால் திறக்கப்பட்டது.
முதலில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சிலை திறப்புக்கு அனுமதி மறுத்ததால், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிபதி சந்துரு அவர்கள், அவ்வழக்கை விசாரித்து தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், சிலை திறக்க அனுமதி மறுப்பது சரியல்ல என்றுகூறி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆணையைத் தள்ளுபடி செய்து சிலை திறக்க 24.11.2010 அன்று அனுமதி ஆணை வழங்கினார். அதன்படிதான், 29.01.2011 அன்று சிலை திறக்கப்பட்டது.
சனவரி 29 – 2015 அன்று, முத்துக்குமார் நினைவு நாள் என்பதால், மேற்படி சாணூரப்பட்டியிலுள்ள முத்துக்குமார் சிலைக்கு, மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்த, தோழர் பெ.மணியரசன் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும், தோழமை இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் இன உணர்வாளர்களும் திரளாகச் சென்று வீரவணக்கம் செலுத்தினர்.
அன்று, 07.11.2014 நாளிட்ட பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் குறிப்பாணையை, அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளர் ஆர். இரத்தினவேல் (புலவர் இரத்தினவேலவன்) அவர்களிடம் அளிக்கப்பட்டது தெரிந்தது. அதில், மேற்கண்ட தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழினம் காக்க தன்னுயிர் ஈந்து, தமிழகம் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களால் நெஞ்சத்தில் வைத்துப் போற்றப்படும் தழல் ஈகி முத்துக்குமார் சிலையை அகற்ற தமிழக அரசு முயல்கிறதோ என்ற ஐயத்தை இக்கடிதம் ஏற்படுத்துகிறது.
எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள், இந்தச் சிக்கலில் கவனம் செலுத்தி, தமிழினத்தின் போற்றுதலுக்குரிய தழல் ஈகி முத்துக்குமார் சிலையை அகற்ற, எந்த மேல் முறையீடு முயற்சியும் எடுக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
4. சல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட வேண்டும் – மக்கள் திருவிழாவாக சல்லிக்கட்டை நடத்த முன் வர வேண்டும்!
தமிழ்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் பண்பாட்டு விளையாட்டான, ஏறுதழுவுதல் என்ற சல்லிக்கட்டு – மாட்டு வேடிக்கையை பல்வேறு பிற்போக்கு சக்திகளும், தமிழினப் பெருமிதங்களின் எதிர்ப்பாளர்களும், நடுவண் அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி தடையாணை பெற்றிருக்கிறார்கள்.
மாட்டைத் துன்புறுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் தடையாணை கோரினார்கள். ஆனால், குதிரையைத் துன்புறுத்தி சூதாட்டம் நடத்தும் குதிரைப் பந்தயத்தை அவர்கள் தடை செய்யக் கோரவில்லை. இதிலிருந்தே, அவர்களது தமிழின எதிர்ப்பு உள்நோக்கம் வெளிப்படுகிறது.
அதுமட்டுமின்றி, காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி செய்த போது, 2013இல் ஜெயராம் ரமேசு தலைமையில் இயங்கிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வித்தை காட்டி பொருளீட்டும் விலங்குகள் தடைச் சட்டத்தின்கீழ் காளையையும் சேர்த்தது. ஆனால், வித்தை காட்டி பொருளீட்டும் விலங்குகளாக குதிரை மற்றும் யானை போன்றவற்றை பயன்படுத்த அத்துறை தடை விதிக்கவில்லை. இதிலிருந்தே அவர்களின் பாகுபாடு பார்க்கும் நோக்கம் தெரிகிறது.
காளையைத் தமிழக உழவர்கள் தங்களுடைய குடும்பப் பிள்ளைகளில் ஒன்றாகத்தான் கருதுவார்கள். பிள்ளையாக தோழனாக கருதப்படும் காளையை, ஐரோப்பிய நாடுகளில் நடப்பதுபோல் ஈட்டியால் குத்தி கொல்லும் எருது விளையாட்டு தமிழ்நாட்டில் கிடையாது. காளை தழுவுதல் என்பதுதான் இந்த விளையாட்டிற்குப் பெயர். ஏறுதழுவுதலுக்காக வளர்க்கப்படும் காளைகள், சிறந்த பசு மாட்டு இனத்தை உருவாக்கிடும் இனப்பெருக்கத்திற்கு முக்கியமானக் காரணியாகும்.
எனவே, சல்லிக்கட்டுக்கு தடை என்பது இம்மண்ணுக்குரிய பசு மாட்டு இனத்தைத் தடை செய்வதாகும். வேளாண் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
தமிழக அரசு, சல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கிட, முதல் வாயிலாக வித்தை காட்டும் விலங்குகள் தடைச் சட்டத்திலிருந்து காளையை நீக்கிட இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்திலுள்ள மறு ஆய்வு வழக்கை விரைந்து முடித்து நல்ல தீர்ப்பைப் பெற, தமிழக அரசு, தீவிரமாக முயலவேண்டும்.
இதற்கிடையே, மரபுவழிப்பட்டு காலங்காலமாக சல்லிக்கட்டு – மாட்டுவேடிக்கை நடந்து வந்த பகுதிகள் அனைத்திலும் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து மக்கள் திருவிழாவாக சல்லிக்கட்டு விழாக்களை நடத்த முன்வர வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
5. தமிழீழ ஏதிலிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்
தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் ஏற்பாட்டில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. ஏதிலியர் முகாம்களில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு விரும்புவோர் விண்ணப்பத்தை நிரப்பித் தருமாறு கோரியுள்ளனர். இதனைப் பொதுவாகப் பார்த்தால் விரும்புவோர் இலங்கைக்குத் திரும்பலாம் தானே என்று தோன்றும். ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே அங்கு வாழும் மக்களே, குடியியல் உரிமையற்று இராணுவ முகாம்களுக்கிடையே பணயக் கைதிகள் போல் உள்ளனர்.
வடக்கு கிழக்கு மாநிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, சிங்கள இராணுவம் வன்கவர்தல் செய்துள்ள தமிழர் நிலங்களை மீட்டுவிட்டு, பெருகிவரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து விட்டு, தமிழர்கள் வாழ்வதற்கான வாழ்வுரிமைகளை உறுதிப்படுத்திவிட்டு, இந்திய அரசு ஈழ ஏதிலியரை விரும்பினால் இலங்கை செல்லுங்கள் என்று கூறினால், அதில் பொருள் இருக்கும்; பொறுப்புணர்வு இருக்கும். ஆனால், கழற்றிவிட்டால் சரி என்று எண்ணத்தில் ஈழத்தமிழர்களை வெளியேறும்படித் தூண்டக் கூடாது. பல வெளிநாடுகள் அங்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளன. உடனடியாகத் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்.
அடுத்து, வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன், குடியியில் வாழ்வுரிமையுடன் வாழும் நிலையை உருவாக்கிவிட்டு விரும்புவோர் இலங்கை செல்லலாம் என்று இந்திய அரசு அறிவிக்கலாம். விருப்பப்படிதான் இலங்கை திரும்புகிறார்கள் என்பதாக வெளியில் சொல்லிவிட்டு, வெளியேறுவதற்கான மறைமுக நெருக்குதல்களை ஈழத்தமிழர்களுக்கு அரசு கொடுக்கக் கூடாது என தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு, இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
6. நியூட்ரினோ ஆய்வகம் நிறுவுவதைக் கைவிடுக!
தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அளித்து, 05.01.2015 அன்று இந்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த ஆய்வகத் திட்டம் பற்றி, செய்திகள் வந்ததிலிருந்தே தேனி மாவட்டத்திலுள்ள மக்களும், தமிழகமெங்குமுள்ள அறிவியலாளர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், அபாயகரமான நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதை, இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த நியூட்ரினோ ஆய்வகம், விண்வெளியிருந்து வரும் நியூட்ரினோ துகள் பற்றி ஆய்வு செய்வதாகக் கூறப்பட்டாலும், “தற்போது முன்மொழியப்பட்டுள்ள காந்தமய தகடுகள் உணர்வு நிலையம் மட்டுமின்றி, வேறு ஆய்வுகளையும் மேற்கொள்ளப்போவதாகவும் இது தொடர்பாக உலகின் வேறு பகுதிகளில் நடக்கும் நியூட்ரினோ ஆய்வுகளோடு இணைந்து செயல்படப் போவதாகவும்” கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள பெர்மி லேப்(Fermi Lab) நியூட்ரினோ தொழிற்சாலையிலிருந்தும், ஜப்பானின் டோக்கியா நியூட்ரினோ தொழிற்சாலையிலிருந்தும் செறிவூட்டப்பட்ட 1500 ஜிகா எலக்ட்ரான் வோல்ட் அளவுள்ள நியூட்ரினோ கற்றைகளை, பூமிக்கடியில் செலுத்தி, பொட்டிபுரம் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.
இவ்வளவு ஆற்றல் மற்றும் நிறை உள்ள மியூவான்(Muon) நியூட்ரினோ கற்றைகளால் முதல் நிலைக் கதிரியக்கமும், அவை ஆய்வக மலைப்பாறைகளில் மோதுவதால் இரண்டாம் நிலை கதிரியக்கமும் ஏற்படும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. எடுத்துக்காட்டு, Muon Colliders and Neutrino Effective doses by J.J. Bevelacqua, 20.12.2012, ஆய்வறிக்கை.
இந்தக் கதிரியக்கம் மனிதர்கள் உள்ளிட்ட, அனைத்து உயிரினங்களுக்கும் தலைமுறை தலைமுறையாகத் தீங்கு விளைவிக்கக்கூடியது. சிறிய அளவு கசிவு ஏற்பட்டால் கூட, கணித்திட முடியாத தீயத் தொடர் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
திட்டமிடப்பட்டுள்ள பொட்டிபுரம் ஆய்வகத்தைவிட, 600 அடி கூடுதல் ஆழம், அதாவது 2100 அடி ஆழத்தில் பூமிக்கு அடியில், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் இயங்கிவந்த Exo200 என்ற செறிவூட்டப்பட்ட செனான்(Xenon) ஆய்வகம், நியூட்ரினோ குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது, 2014 பிப்ரவரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியைச் சுற்றி கடுமையான கதிரியக்கம் வெளிப்பட்டு, அந்த ஆய்வகம் மூடப்பட்டது. இன்னும், 2 ஆண்டுகளுக்கு அதன் அருகில்கூட யாரும் நெருங்க முடியாது என அந்த ஆய்வக நிர்வாகம் அறிவித்துள்ளது. (காண்க : Nature / News, June 4, 2014).
இந்த ஆய்வகத்தை எதிர்காலத்தில் மூடுகிறபோது தங்கும் கதிரியக்கக் கழிவுகள் நீண்டகால ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. (Macro Saliric et al 2012).
இந்த ஆய்வகத்தை நிறுவும்போது, அப்பகுதியிலுள்ள நீரியல் அடுக்கு பெருமளவு பாதிக்கப்படும் ஆபத்து உண்டு. ஒருநாளைக்கு, ஏறத்தாழ 16 இலட்சம் லிட்டர் தண்ணீர் இந்த ஆய்வகத்திற்காக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. இது, அப்பகுதி வேளாண்மையையும் குடிநீர் வாய்ப்பையும் கடுமையாக பாதிக்கும்.
உண்மை இவ்வாறிருக்க, விண்வெளியிலிருந்து வரும் ஆபத்தில்லாத நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதற்கான நிலையம்தான் இது என அரசும், சில அறிவியலாளர்களும் அரை உண்மைகளைக் கூறி, ஆபத்தை மூடி மறைக்கப்பார்க்கிறார்கள்.
எனவே, பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
7. செண்பகவல்லி அணையை கேரள அரசு கட்டிக் கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இராசபாளையம் – சாத்தூர் – வாசுதேவ நல்லூர் – சங்கரன்கோயில் பகுதிகளில், சுமார் 20,000 ஏக்கர் சாகுபடிக்கு பயன்பட்டு வந்த, செண்பகவல்லி அணை உடைந்ததால், அப்பகுதியில் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ் அணையை சீரமைத்துத் தர கேரள அரசு கோரிய 5 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்கி, பல ஆண்டுகள் ஆன பின்பும், இதன் மீதான திரு. வைகோ தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், கேரளப் பொதுப்பணித்துறை செண்பகவல்லி அணையைக் கட்டித்தர மறுக்கிறது.
கேரள அரசின் இந்த அடாவடிப் போக்கைக் கண்டித்தும், செண்பகவல்லி அணையைக் கட்டித் தரக் கோரியும் வாசுதேவ நல்லூரியில் 2015 மார்ச் 17 அன்று, பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானிக்கிறது.
-http://www.nakkheeran.in