சீக்கியர்களுக்கு எதிராக, தில்லியில் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவர வழக்குகளை, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து மறு விசாரணை நடத்த வேண்டுமென மத்திய அரசின் சிறப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை மறுவிசாரணை செய்வதற்கான முகாந்திரத்தை ஆராய்வதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.பி.மாத்தூர் தலைமையிலான குழுவை, கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மத்திய அரசு அமைத்தது.
அந்தக் குழுவானது தனது ஆய்வறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த வாரம் அளித்தது. சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இதுதொடர்பான உத்தரவு வரும் 7ஆம் தேதிக்குப் பிறகு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அகாலி தளம் வரவேற்பு: மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அகாலி தளம் அமைப்பு வரவேற்றுள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவரும், தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டியின் தலைவருமான மன்ஜித் சிங் கூறியதாவது:
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக, கடந்த 30 ஆண்டுகளாக அகாலி தளம் அமைப்பு போராடி வருகிறது. காலத்தை வீணடிக்காமல், உடனடியாக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரித்து, நீதி வழங்க வேண்டும் என்றார் மன்ஜித் சிங்.
காங்கிரஸ் எதிர்ப்பு: மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது:
இது, தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சீக்கியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி செய்யும் ஏமாற்று வேலையாகும்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது. கடந்த 9 மாதங்களாக மத்திய அரசு உறக்கத்தில் இருந்ததா?
சீக்கியர்களுக்கு எதிரான வழக்குகளை மறு விசாரணை செய்தால், குஜராத் வன்முறை, முசாஃபர்நகர் வன்முறை, தில்லி மங்களபுரி வன்முறை ஆகியவை குறித்தும் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றார் ரண்தீப் சிங் சுர்ஜிவாலா.
ஆம் ஆத்மி எதிர்ப்பு: இதனிடையே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான எச்.எஸ்.பூல்கா கூறியதாவது:
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளில், எத்தனை வழக்குகளை மத்திய அரசு மறு விசாரணை செய்யும் என யாருக்கும் தெரியாது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவே, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கும் பரிந்துரையை மத்திய அரசு கசியச் செய்துள்ளது.
ஏற்கெனவே, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதுவரை, 17 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றார் எச்.எஸ்.பூல்கா.
பின்னணி: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, அவரது பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, தில்லி உள்பட பல்வேறு நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் மூண்டது.
இந்தக் கலவரத்தில் 3,325 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் தில்லியில் மட்டும் 2,733 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள், உத்தரப்பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான 241 வழக்குகளில், 4 வழக்குகளை மட்டும் மறு விசாரணை நடத்த வேண்டுமென நீதிபதி நானாவதி குழு பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி, 4 வழக்குகளை மட்டும் சிபிஐ மறுவிசாரணை செய்தது. அவற்றில், இரண்டு வழக்குகளில் மட்டும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில்,
ஒரு வழக்கில், முன்னாள் எம்எல்ஏ உள்பட 5 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், எஞ்சியுள்ள 237 வழக்குகளையும் விசாரிக்க வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“பிரதமர் தலையிட வேண்டும்’
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை மறுவிசாரணை நடத்துவதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பதில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளில், பல முக்கிய ஆதாரங்களை தில்லி போலீஸார் கவனிக்கத் தவறிவிட்டனர்.
காங்கிரஸ் தலைவர்கள் சஜ்ஜன் குமார், ஜகதீஷ் டைட்லர் ஆகியோர் மீதான வழக்குகளை மறு விசாரணை செய்ய வேண்டும்.
மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த விவகாரம், மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் மறைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், மத்திய சிறப்புக் குழு தற்போது அளித்துள்ள பரிந்துரை, கலவரத்தால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
-http://www.dinamani.com