இலங்கையின் கலப்புக் கொள்கையால் இந்தியாவுக்கு கவலை

modi_maithri_001இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய அரசாங்கத்தின் கீழ் உறவுகள் பலப்பட்டாலும் இலங்கையின் இரட்டை நிலைப்பாடு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிராந்திய நாளேடு ஒன்று இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இந்தியாவுக்கு நல்லெண்ண சமிக்ஞைகள் காட்டப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு சென்று பேச்சுக்களை நடத்தினார். இலங்கையின் 67வது சுதந்திர தினத்திலும் காலையிலேயே மோடி, சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எனினும் 45 நிமிடங்களுக்கு பின்னர் சீன ஜனாதிபதி சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பாக கருதப்பட்ட சீனாவின் திட்டங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வழங்கிய அனுமதிகளை மைத்திரிபால அரசாங்கமும் முன்னெடுத்து செல்வது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சீனாவினால் 1.4 பில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொழும்பு போட் சிட்டி நிர்மாணத்தை ரத்து செய்யப்போவதாக முன்னதாக இலங்கையின் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

எனினும் தற்போது அந்த திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன இந்தியா செல்லும் போது குறித்த விடயங்கள் தொடர்பில் அவரிடம் தெளிவான கொள்கைகள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்தியாவின் பிராந்திய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: