தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி, ஆம் ஆத்மி கட்சி ஆழிப் பேரலை வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன்மூலம், தலைநகரில் அக்கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. மீண்டும் தில்லி முதல்வராக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் (46) வரும் 14-இல் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு முக்கியப் போட்டியாகக் கருதப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மற்ற இடங்களில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. அக்கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடியும் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
தில்லி தேர்தல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான வாக்குக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனவும் சுமார் 20 இடங்களில் பாஜக வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி ஆம் ஆத்மி கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. இதில், புது தில்லி தொகுதியில் போட்டியிட்ட “ஆம் ஆத்மி’ முதல்வர் பதவி வேட்பாளரான அரவிந்த் கேஜரிவால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நூபுர் சர்மாவை விட 31,583 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கேஜரிவால் ஏற்கெனவே 2013-ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய காங்கிரஸ் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கிரண் பேடி தோல்வி: இத்தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.கே. பக்காவிடம் அவர் சுமார் 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்விடைந்தார்.
பாஜக கருத்து: இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: தில்லியில் ஆம் ஆத்மிக்கு அதிகரித்துள்ள செல்வாக்கை ஏற்கிறோம். கேஜரிவாலுக்கும், அவரது கட்சிக்கும் எங்கள் வாழ்த்துகள் என்றார்.
தில்லி தேர்தல் முடிவுகள்
மொத்தம் 70
ஆம் ஆத்மி 67
பாஜக 3
காங்கிரஸ் 0
மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்
தேர்தல் முடிவுகள் நண்பகல் 12 மணியளவிலேயே ஆம் ஆத்மிக்கு சாதகமாக அமைந்ததும், அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதியானது. இதையடுத்து, அரவிந்த் கேஜரிவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, “தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்யவும், மாநகரின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்’ என்று நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
பதவி விலகிய நாளிலேயே மீண்டும் பதவியேற்கிறார் கேஜரிவால்
தனது கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையடுத்து, தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். துணைநிலை ஆளுநருடனான இந்தச் சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது.
“ஆட்சி அமைப்பது குறித்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பப்படும்’ என்று பின்னர் துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வரும் 14ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கேஜரிவால் முதல்வராக பதவியேற்கிறார். கடந்த ஆண்டு இதே நாளில் (பிப்ரவரி 14) கேஜரிவால் தில்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வராகப் பதவியேற்பதை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கும், அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க கேஜரிவால் திட்டமிட்டுள்ளார்.
தலைவராகத் தேர்வு
அரவிந்த் கேஜரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் “கான்ஸ்டிடியூஷன் கிளப்’பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அதில், கேஜரிவாலை சட்டப்பேரவை ஆம் ஆத்மி கட்சித் தலைவராக எம்எல்ஏக்கள் முறைப்படி தேர்ந்தெடுத்தனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பு
முதல்வராக பொறுப்பேற்க உள்ள அரவிந்த் கேஜரிவாலுக்கு 30 கமாண்டோ வீரர்கள் கொண்ட உயர்ந்தபட்ச “இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்க தில்லி காவல் துறைக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
தில்லி தேர்தலில் பாஜக அடைந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்; நூறு சதவீதம் வெற்றி பெற்ற கேஜரிவால் தில்லியை வளர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்ல
வாழ்த்துகள்.
– சுட்டுரை (டுவிட்டர்) வலைப்பக்கத்தில் கிரண் பேடி
பாஜகவின் ஆணவமும், திமிர்த்தனமும் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தில் இறுதி முடிவு மக்களிடம் இருக்கின்றது. அரசியலில் பழிவாங்குதல், மக்களை கேலி செய்தல் ஆகியவற்றுக்கு இடமில்லை.
– மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன். மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததால் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே நல்ல காலம் பிறந்திருப்பதாகப் பொதுமக்கள் கருதினர். அதனால்தான், ஆம் ஆத்மிக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது.
அரசைவிட மக்கள் மன்றம் மிகவும் பலம் வாய்ந்தது. அவர்கள் தங்களது தீர்ப்பைக் கூறி விட்டனர். கேஜரிவால் எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்று நான் அறிவுரை கூறத் தேவையில்லை. அவர் என்னைவிட அனுபவத்தில் சிறந்தவர். எனவே, நல்ல முறையில் செயல்படுவார் என நம்புகிறேன்.
– சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே
பாஜகவால் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் மோடியின் பெயராலேயே வெளியிடப்பட்டன; எனவே, தில்லி தேர்தல் முடிவுகளை மோடிக்கு எதிரான கருத்துக் கணிப்பாகத்தான் கருத வேண்டும்.
– ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் நிதீஷ் குமார்
பிரதமர் மோடியும், பாஜகவும் தோற்கடிக்க முடியாதவர்கள் அல்ல’ என்பதே தேர்தல் முடிவுகளில் இருந்து காங்கிரஸ் கட்சி உணர வேண்டிய பாடமாகும். எனவே, கடந்த கால தவறுகளை நினைக்காமல் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் போராட வேண்டும்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா
–http://www.dinamani.com