172 அரிய பழந்தமிழ் நூல்கள்: புதுப்பித்து வெளியிட முடிவு

  • சேகரிக்கப்பட்ட பழந்தமிழ் நூல்கள்.

    சேகரிக்கப்பட்ட பழந்தமிழ் நூல்கள்.

காஞ்சிபுரம் அருகே நூலகத்தில், பாதுகாக்கப்பட்டு வந்த 172 அரிய நூல்களை புதுப்பித்து மீண்டும் வெளியிட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தில் சமரச சன்மார்க்க சங்க நூலகம் உள்ளது.

இங்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 1862-ஆம் ஆண்டு வெளி வந்த சபாபதி முதலியாரின் மதுரை 64 திருவிளையாடல் சற்குரு மாலை, 1889-ஆம் ஆண்டு வெளிவந்த சூரிய நாராயண சாஸ்திரிகளின் தமிழ்மொழி வரலாறு, 1894-ஆம் ஆண்டு வெளிவந்த மாத்ரு பூதையரின் நந்த மண்டல சதகம் (தொல்காப்பியத்தை ஒப்பிட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் கதை), 1897-ஆம் ஆண்டு வெளிவந்த திருப்பதி திருமலையான் குறித்த வட வேங்கட நாராயண சதகம், 1899-ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி நாவலர், 1905-ஆம் ஆண்டு வெளிவந்த திருஞான சம்பந்தரின் சரித்திரம் குறித்த ஓரடி சிந்து, 1911-ஆம் ஆண்டு வெளிவந்த அத்வைதம் தமிழ் மொழி பெயர்ப்பு நூலான தத்துவாநூ, 1914-ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்த போதினி இதழ் (ஆங்கில மோகம் குறித்தும், அதனால் தமிழ் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்த இதழ்), 1916-ஆம் ஆண்டு வெளியான தொண்டை மண்டல சரித்திரம் உள்ளிட்ட 172 அரிய நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் தலைமையில், நிறுவனத்தின் நூலகர் பெருமாள்சாமி, ஆராய்ச்சி மாணவர்கள் பத்மபிரியா, அருட்பாமணி, மூத்தத் தமிழ் அறிஞர்கள் பலர் புதுப்பாளையத்தில் சமரச சன்மார்க்க சங்க நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த நூல்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

இந்த நூல்கள் அனைத்தும் இப்போது படிக்க முடியாத நிலையில் மிகவும் மோசமாக கிழிந்துள்ளது.

இதுகுறித்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் கூறியதாவது:

தமிழக அரசின் அரிய வகைச் சுவடிகள், அரிய வகைப் புத்தகங்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் சமரச சன்மார்க்க சங்க நூலகத்தில் இருந்த மிக, மிக அரிய வகை 172 நூல்களை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுப் பெற்றுள்ளது.

150 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நூல்களை இன்றைய இளைஞர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் அவற்றை கணினியில் அச்சேற்றி, மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இந்தப் பணியை உடனடியாகத் தொடங்க உள்ளோம். வரும் 24-ஆம் தேதி மேற்கண்ட 172 நூல்களை மறுபிரசுரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மொத்தம் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் மிகவும் அரிய வகை நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றார் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன்.

-http://www.dinamani.com

TAGS: