“இசட் பிளஸ்’ பாதுகாப்பை ஏற்க கேஜரிவால் மறுப்பு

தில்லி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவால், “இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை ஏற்க புதன்கிழமை மறுத்து விட்டார்.

தேசியத் தலைநகராக விளங்கும் தில்லியின் முதல்வர் என்ற முறையில் அப்பதவியை வகிப்பவருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் என்ற மத்திய உளவு அமைப்புகளின் பொதுவான எச்சரிக்கை எப்போதும் உள்ளது.

இந்நிலையில், கேஜரிவாலுக்கு 30 கமாண்டோக்கள் கொண்ட “இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை அளிக்கும்படி தில்லி காவல் துறைக்கு மத்திய உள்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தற்போது கேஜரிவால் உத்தரப்பிரதேச மாநிலம், கௌஷாம்பியில் வகித்து வருவதால் அவருக்கு அந்தமாநில காவல் துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவரது வீட்டுக்கும், கட்சி அலுவலகத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களுடனான இணைப்பைப் பிரிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் அதை ஏற்கத் தயாராக இல்லை என்று அரவிந்த் கேஜரிவால் தெளிவுபடுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ஆசுதோஷ் தெரிவித்தார்.

2013-இல் தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்ற போது அவருக்கு “இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு கேஜரிவால் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, குறைந்த எண்ணிக்கையிலான காவல் சீருடை அணிந்த ஆயுதப் படையினரும், சாதாரண உடையில் காவலர்களும் கேஜரிவாலுக்கு பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: