தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து: மத்திய அரசிடம் கேஜரிவால் வலியுறுத்தல்

  • தில்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை வரவேற்று  வாழ்த்து தெரிவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

    தில்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை வரவேற்று  வாழ்த்து தெரிவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தில்லி யூனியன் பிரதேசத்துக்கு முழுமையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

தில்லி சட்டபேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வரும் சனிக்கிழமை கேஜரிவால் தலைமையிலான புதிய அரசு பதவியேற்கவுள்ளது.

இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோரை

புதன்கிழமை கேஜரிவால் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தில்லியின் வளர்ச்சிப் பணிகளுக்கும், அரசின் திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்’ என்று வெங்கய்ய நாயுடுவிடம் அவர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

தில்லி முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். நகரின் வளர்ச்சிக்கு அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எனது துறையின் ஆதரவைத் தெரிவித்தேன். “டீம் இந்தியா’ போல தில்லி அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்’ என்றார்.

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கேஜரிவாலும், மணீஷ் சிசோடியாவும் சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா கூறியதாவது:

தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகளை முழுமையாக ஒழுங்குமுறைப்படுத்த ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கும் பிற திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வெங்கய்ய நாயுடுவை கேட்டுக் கொண்டோம்.

தில்லிக்கு மாநில அந்தஸ்தை முழுமையாக வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் கேஜரிவால் கேட்டுக் கொண்டார்.

மேலும், வரும் 14-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள ஆம் ஆத்மி அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும்படியும் அழைப்பு விடுத்தோம் என்றார்.

பிரதமருடன் இன்று சந்திப்பு

“பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை (பிப்ரவரி 12) சந்திக்க நேரம் கிடைத்துள்ளது. அவரையும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்போம்’ என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக கேஜரிவால் சந்தித்துப் பேசினார். அப்போது “இந்திய அரசமைப்பு’ என்ற புத்தகத்தையும், தான் எழுதிய “நினைவுகளும் பிரதிபலிப்புகளும்’ என்ற புத்தகத்தையும் கேஜரிவாலுக்கு பிரணாப் முகர்ஜி பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

-http://www.dinamani.com

TAGS: