வடக்குமாகாண சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி சென்னையில் 16ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வடக்குமாகாண சபை ‘ஈழத்தில் நடத்தப்பட்டது இனப்படுகொலைதான். அதை ஐநா சபை விசாரித்து சர்வதேச நீதிமன்றத்தின்மூலம் தண்டிக்கவேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்மானத்தை மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரித்துள்ளனர். அந்தத் தீர்மானத்தின் நியாயத்தை உணர்ந்து இந்தியா அதை ஆதரிக்கவேண்டும்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கை விவாதிக்கப்படவேண்டும்.
இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிங்களப் பெரும்பான்மையின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் ஐநா அறிக்கையை தள்ளிப்போடுவதற்கு இலங்கை முயற்சித்து வருகிறது. தற்போது அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்களசமரவீர அதற்கான ஆதரவைத் திரட்டிவருகிறார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளைப் பற்றி இலங்கை அரசாங்கமே விசாரணையை நடத்துமென்றும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையை இலங்கை அரசின் விசாரணை அமைப்பிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம் எனவும் மைத்ரிபாலா தலைமையிலான இலங்கை அரசு கூறிவருகிறது. அதை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சீனாவின் செல்வாக்கைக் குறைத்தால் போதும் என்ற சுயநல நோக்கத்தில் இலங்கையைக் காப்பாற்ற அமெரிக்கா செய்யும் இந்த சதிக்குச் இந்தியா துணைபோகக்கூடாது.
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவித்தல் போன்ற பசப்புகளுக்கு இந்தியா ஏமாந்து விடக்கூடாது. ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை இந்தியா ஆதரிக்கவேண்டும்.
இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் மைத்ரிபாலாவிடம் இதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும்.
ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இந்த மார்ச் மாதத்திலேயே இலங்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என இந்தியா உறுதிபடக் கூறவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் எதிர்வரும் 16.02.2015 திங்கள் காலை எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறியுள்ளார்.
-http://www.nakkheeran.in