தில்லி முதல்வராக கேஜரிவால் இன்று பதவியேற்கிறார்

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் (46) சனிக்கிழமை பதவியேற்க உள்ளார். இதையொட்டி, தில்லி ராம்லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில் அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, கேஜரிவால் தலைமையிலான புதிய அரசில் துணை முதல்வராக மணீஷ் சிசோடியா, அமைச்சர்களாக ஜிதேந்திர தோமர், கோபால் ராய், சந்தீப் குமார், ஆசிம் அகமது கான் ஆகியோர் பதவியேற்கக்கூடும் என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல தில்லி சட்டப்பேரவைத் தலைவராக ஷாதரா தொகுதி உறுப்பினர் ராம்நிவாஸ் கோயலும், சட்டப்பேரவைத் துணைத் தலைவராக ஷாலிமார் பாக் தொகுதி உறுப்பினர் வந்தனா குமாரியும் பதவியேற்கக் கூடும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தமது முதல்வர் பதவியை கேஜரிவால் ராஜிநாமா செய்தார். அவர் பதவி விலகிய அதே நாளில் இந்த ஆண்டு அவர் தலைமையிலான புதிய அரசு சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பதவியேற்கவுள்ளது.

மக்களுக்கு அழைப்பு: இதையொட்டி, ராம்லீலா மைதானத்தில் தில்லிவாசிகள், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள அரவிந்த் கேஜரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆகையால், இந்நிகழ்வை லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்வையிடுவார்கள் என்பதால், ராம்லீலா மைதானம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,200 காவலர்கள் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

-http://www.dinamani.com

TAGS: