தில்லியில் கிறிஸ்தவப் பள்ளி மீது தாக்குதல்: காவல் துறை ஆணையரை அழைத்து பிரதமர் கண்டிப்பு

தெற்கு தில்லியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி மீது மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். தலைநகரில் கடந்த சில வாரங்களாக கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிகள் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்படும் ஆறாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இதையடுத்து, தில்லி மாநகர காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸியை நேரில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி, “இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.

தெற்கு தில்லி வசந்த் விஹாரில் உள்ள ஹோலி சைல்டு ஆக்ஸிலியரி கிறிஸ்தவப் பள்ளியின்  முதல்வர் அறையை அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், அப்பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்குத் திரும்பும்படி அதன் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸியை தனது அலுவலகத்துக்கு அழைத்த பிரதமர் மோடி சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

 பிரதமர் உத்தரவு: இது குறித்து பின்னர் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:

தலைநகரில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து காவல் துறை ஆணையர் பஸ்ஸியை நேரில் அழைத்து பிரதமர் விளக்கம் கேட்டார். அதிகரித்து வரும் குற்றச் செயல்களுக்கு ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்த பிரதமர், கிறிஸ்தவ தேவாயங்கள், பள்ளிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி ஆய்வு: தாக்குதலுக்கு உள்ளான பள்ளிக்கு நண்பகல் 12 மணியளவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்று பார்வையிட்டார். அப்பள்ளியின் முதல்வர் சகோதரி லூசியிடம் தாக்குதல் சம்பவம் குறித்த  விவரத்தைக் கேட்டறிந்தார். ஸ்மிருதி இரானி இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஜரிவால் கண்டனம்
கிறிஸ்தவப் பள்ளி மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தில்லி முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சுட்டுரையில் பதிவு செய்துள்ள கருத்தில் “இத்தகைய சம்பவங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: