172 இந்திய மீனவர்கள் விடுதலை: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை

india-pakistan-flag_0பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள்,ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே உயர்நிலைப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வது என்று இரு நாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்திருந்த நிலையில், பாகிஸ்தான் அரசு 172 இந்திய மீனவர்களை, ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்தது.

இதுகுறித்து, மாலிர் சிறையின் கண்காணிப்பாளர் முகமது செதோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கராச்சியில் உள்ள மாலிர், லாந்தி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் ரயில் மூலமாக வாகா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களது தண்டனைக் காலத்தை முடித்து விட்டவர்கள். மாலிர், லாந்தி சிறைகளில் மேலும் 349 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார் முகமது செதோ.

இதுகுறித்து, லாந்தி சிறையின் கண்காணிப்பாளர் குலாம் ஹுசைன் கூறுகையில் “மீனவர்கள்

தங்களது விடுதலையைக் கொண்டாடும் பொருட்டு அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் மகிழ்ச்சியோடு நாடு திரும்பினர்’ என்றார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதற்காக, வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கரை அங்கு அனுப்பப் போவதாகவும் கூறியிருந்தார்.

அரேபியக் கடலில் எல்லையை மீறி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்திருந்தது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 40 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: