புது டில்லி: பிரம்மபுத்திரா நதியின் வழித்தடத்தில் சீன அரசு அணைகள் கட்டுவதால், இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கனடா நாட்டு சுற்றுச்சூழல் விஞ்ஞானி மைக்கேல் பக்லி எச்சரித்துள்ளார்.பிரம்மபுத்திரா நதி சீனாவில் உருவாகி, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வழியாகச் செல்கிறது. அசாம், அருணாசலப் பிரதேச மாநிலங்களில் விவசாயத்துக்கான முக்கிய நீர் ஆதாரமாகவும் இந்த நதி விளங்குகிறது.
கனடாவைச் சேர்ந்த மைக்கேல் பக்லி என்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு, திபெத்தில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஆவணப்படுத்தியுள்ளார்.மேலும், மெல்ட்டவுன் இன் திபெத் என்ற சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டுள்ள அவர், பிரம்மபுத்திரா நதியின் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் அணைகளால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில்,பிரம்மபுத்திராவின் குறுக்கே, சீனப் பொறியாளர்கள் தற்போது 5 பெரிய அணைகளைக் கட்டி வருகின்றனர்.
சீனாவின் லாஸா பகுதிக்கு 86 மைல் தொலைவில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள “ஜாங்மூ அணை’ தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. இதைத் தவிர பிரம்மபுத்திராவின் குறுக்கே மேலும் 20 அணைகளைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இந்த அணைகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆனால் சீனாவால் கட்டப்படும் அணைகள் அனைத்தும் செயல்படத் தொடங்கினால், பிரம்மபுத்ரா நதி தற்போது உள்ளது போல், வருங்காலத்தில் இருக்காது.
அசாம்,இமாச்சலுக்கு ஆபத்து
நதியில், நீருடன் கலந்து வரும் மண்ணில் கனிமச் செறிவு நிறைந்துள்ளது. அணைகளைக் கட்டி அந்த வண்டல் மண்கள் தடுக்கப்பட்டு, வெறும் தண்ணீர் மட்டும் இந்தியாவுக்கு வருமானால் அசாம், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும்.
மேலும், அத்தகைய வண்டல் மண் கலந்த நீர் கட்டுப்படுத்தப்பட்டால், இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மீன்வளம், பல்லுயிர்ப்பெருக்கம், நீர் வளம் உள்ளிட்டவையும் அழியும் நிலை ஏற்படும். எனவே திபெத் பகுதியிலும், பிற இடங்களிலும் அணைகள் கட்டும் திட்டத்தை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஒத்திவைக்க வேண்டும்.பாகிஸ்தான், வங்கதேசத்துடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டதைப் போல சீனாவுடனும் நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக இந் நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளுதன் மிகுந்த அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
-http://www.dinamalar.com