சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கை ஒன்றை இந்திய ஹைதராபாத் பொலிஸார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் 9 கடவுச்சீட்டுகளையும் இரண்டு மடிக்கணனிகளையும் 6 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே இலங்கை உட்பட்ட வகையில் இவ்வாறான சம்பவம் ஒன்று இந்திய ஊடகங்களினால் வெளியிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று சம்பவம் தொடர்பில், 60வயதான மருத்துவரான ஹிர்டேஸ் செக்ஸ்னா, ராகவேந்தர் என்று அழைக்கப்படும் 34 வயதான மருத்துவர் சஞ்சய் கபூர், 22 வயது மாணவர் ஏ அசோக், கடவுச்சீட்டு முகவரான 32 வயதான சஞ்சய் குமார் ஜெய்ன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், ராகவேந்தர் என்பவர் தமது சிறுநீரகத்தை ஏற்கனவே விற்பனை செய்துள்ளார். இவரும் அசோக் என்பவரும் ஆட்களை தெரிவுசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவர் செக்ஸ்னா, ஒரு ஆளுக்கு 3 லட்சம் ரூபா என்ற அடிப்படையில் தரகுப்பணம் வழங்கியுள்ளார்.
இதில் 50ஆயிரம் ரூபாவை அசோக், கடவுச்சீட்டு முகவரான சஞ்சய்குமாருக்கு வழங்கி வந்துள்ளார்.
இதேவேளை சிறுநீரகத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு மருத்துவர் செக்ஸ்னா 30 லட்சம் ரூபாவை அறவிட்டு வந்துள்ளார்.
அதேநேரம் சிறுநீரக வழங்கிகளுக்கு 3 லட்சம் ரூபாவை வழங்கி வந்துள்ளார். இந்த வியாபாரம் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வந்துள்ளது.
இதன்படி 10பேர் வரை தமது சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுநீரக மாற்று சிசிக்சைகள், இலங்கையின் நவலோக்க, லங்கா ஹொஸ்பிட்டல் மற்றும் ஈரானில் உள்ள மொஹாப் மருத்துவமனை என்பவற்றில் இடம்பெற்றுள்ளன என்று ஹைதராபாத் பொலிஸார் தெ ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளனர்.
-http://www.tamilwin.com