பந்தலூர் அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற புலியை நேற்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் கூட்டு அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலூகாவிலுள்ள பாட்டவயல் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மகாலட்சுமி என்ற பெண்ணை கடந்த 4 நாள்களுக்கு முன் புலி தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார்.
மேலும், அந்தப் புலி அதே பகுதியில் உள்ள ரதீஷ் என்ற இளைஞரையும் தாக்கியது. இதையடுத்து, அந்தப் புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கோவை மண்டல வனப் பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில், அதிரடிப்படையினர் உள்பட 120 பேர், 5 குழுக்களாகப் பிரிந்து அந்தப் புலியைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை மதியம் சூசம்பாடி அருகே, பெரும்பள்ளி என்னுமிடத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அந்தப் புலி பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில் அதிரடிப்படையினர் அந்தப் புலியை சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து, புலியின் சடலம் கூடலூர், ஈட்டிமூலையிலுள்ள வனச் சரக அலுவலக வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் முன்னிலையில் புலியின் சடலத்தை வனத் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், சுமார் 7 அல்லது 8 வயதுடைய ஆண் புலி என்பதும், அதன் வலது தோள் பட்டையில் ஏற்கெனவே ஒரு காயம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், காட்டுக்குள் ஓடும் விலங்குகளை வேட்டையாட முடியாமல் அது மனிதர்களைக் கொன்றுள்ளது என்பதும் தெரியவந்தது.
ஆய்வுக்குப் பின், கால்நடை மருத்துவர்கள் மனோகரன், விஜயராகவன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் புலியின் சடலத்தை பரிசோதனை செய்து எரியூட்டினர்.
புலியால் ஏற்பட்ட அச்சத்தால் பாட்டவயல், பெண்ணை, முதிரக்கொல்லி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
புலி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, வியாழக்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்தார்.
-http://www.dinamani.com