புதுடெல்லி, பிப். 20– தமிழகத்துக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கேரள அரசு கவனித்து வருகிறது. இதனால் அணையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிக்கு செல்லும் தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீசார் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர்.
இதனால் அடிக்கடி தமிழக அதிகாரிகளுக்கும் கேரள போலீசாருக்கும் மோதல் ஏற்படுகிறது. தமிழக அதிகாரிகள் கடமையை செய்யவிடாமல் கேரள போலீசார் தடுத்து விடுகிறார்கள்.
எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை மத்திய அரசு ஏற்று மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு பலமுறை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கு கடிதம் எழுதியது. மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக கேரள அரசும், மத்திய அரசும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-http://www.maalaimalar.com