நீதித்துறையை விலைக்கு வாங்காதீர்

courthபுதுடில்லி : நீதித்துறையில் லஞ்சத்தை புகுத்த முயற்சிக்க வேண்டாம் என அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. அவ்வாறு லஞ்சம் கொடுத்து சட்டத்தை வாங்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியதிருக்கும் எனவும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜாமின் பெறுவதற்காக, ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க உரிமையாளர் ஜனார்த்தன ரெட்டி, விசாரணை நீதிபதி பட்டாபிராம ராவுக்கு ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார். சட்ட விரோதமாக சுரங்கம் வைத்திருந்த வழக்கு மற்றும் அந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக சாட்சியங்களை மாற்றுவதற்காக லஞ்சம் கொடுத்தது ஆகிய இரண்டு வழக்குகளில் ஜாமின் பெறுவதற்காக நீதிபதிக்கு ரூ.10 கோடியை ஜனாத்தன ரெட்டி லஞ்சமாக கொடுத்துள்ளார்.

நீதிபதி சஸ்பெண்ட்:

நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், பட்டாபிராம ராவை ஆந்திர ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்தது. லஞ்சம் பட்டாபிராமாராவ் மற்றும், லஞ்சம் கொடுத்து ஜாமின் பெற்ற ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்ட 5 பேர் மீதும் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், ரோகிடன் நரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

லஞ்ச வைரஸ்:

வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த பெஞ்ச், தயவு செய்து நீதித்துறையில் லஞ்சத்தை கொண்டு வராதீர்கள். இந்த துறையையாவது லஞ்சம் இல்லாமல் இருக்க விடுங்கள். அதிகப்படியான பணம் வைத்திருப்பதால் இப்போது நீதிபதிக்கே லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு வந்து விட்டார்கள். அளவுக்கு அதிகமாக பணம் வருவதால் அவர்களுக்கு அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் தங்களிடம் உள்ள பணத்தை கொண்டு நீதித்துறையையும், கோர்ட் நடவடிக்கைகளையும் வாங்க முயற்சிக்கிறார்கள்.
கோர்ட் நடவடிக்கைகளில் விளையாட நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படும். நீதித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பழக்க நினைப்பது சட்ட திட்டங்களையே கடத்த நினைப்பதற்கு சமம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உண்மை வௌிவந்தது:

ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், அந்த நீதிபதிக்கு உண்மையில் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. ஆனால் அந்த கேள்விக்கு பதிலளி்க்காமல் வழக்கறிஞர் மழுப்பினார். ஆனால் விடாபிடியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பெஞ்ச், கொடுத்த லஞ்ச பணத்தின் தொகையை சொல்ல வெட்கப்பட வேண்டாம். தொகையை சொல்லுங்கள் என கேட்டது. நீதிபதிகள் வற்புறுத்தியதை அடுத்து ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்ததாக வழக்கறிஞர் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரெட்டி மீதான வழக்குகளை இதனுடன் இணைக்க வேண்டாம். நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்ததை சரி என்று எவ்வாறு உங்களால் வாதாட முடிகிறது என கேள்வி எழுப்பினார்.

-http://www.dinamalar.com

TAGS: