10 ஆண்டு சுணக்கத்தை 10 மாதங்களில் போக்க முடியாது

nnnபுதுடில்லி: ”கடந்த 10 ஆண்டுகளாக சோம்பிக் கிடந்த நாட்டின் பொருளாதாரத்தை, 10 மாதங்களில் சுறுசுறுப்பாக்க முடியாது,” என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது, ‘மோடியின் ஒன்பது மாத ஆட்சியில், தொழில் துறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை,’ என, எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரேக், இரு தினங்களுக்கு முன் கூறியதற்கு பதிலடியாக கருதப்படுகிறது. ஏற்கனவே, தீபக் பரேக்கிற்கு பதில் அளிக்கும் விதமாக, ‘மத்திய அரசு வேகமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது,’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும்; ‘தீபக் பரேக் தனிப்பட்ட முறையில் ஏதாவது பாதிக்கப்பட்டாரா?’ என, மத்திய இணை அமைச்சர் பீயுஷ் கோயலும் கிண்டலடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:

பா.ஜ., அரசு என்று பாராமல், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, பொருளாதார சீர்திருத்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு, அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி, அவ்வாறு செயல்பட வைப்பதற்கான பகீரத முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அதற்கான களப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில், அதன் பயன் தெரியவரும். அதை, தொழில்துறையினர் தான், முதலில் கூறுவர் என, நான் திடமாக நம்புகிறேன். அவசர கதியில் இயங்காமல், திடமான கொள்கையின் அடிப்படையில், நீண்ட கால பயன்களை கருத்தில் கொண்டு, திட்டங்களை வகுத்து, அதன்படி அரசு செயல்பட்டு வருகிறது. சுலபமாக தொழில் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு, ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாக நடைமுறை என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை. இவ்வாறு, அவர் கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: